===ஜி.எஸ். அமர்நாத்===
செய்யும் தொழிலில் சீர்தூக்கின்; நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை!
– என்பது முதுமொழி.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மக்களுக்கு கைத்தறி தொழிலே வாழ்வாதாரமாக உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 1.90 லட்சம் நெசவாளர் குடும்பங்கள் உள்ளன. 3.19 லட்சம் நெசவாளர்கள் மற்றும் நெசவு சார்ந்த உபதொழில் புரிவோருக்கும் இத்தொழில் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.

நெசவாளர் நலனுக்காக, தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கும் திட்டம், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், வட்டி மானியத் திட்டம், ஆயுள் காப்பீட்டு திட்டம், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என பல்வேறு திட்டங்களை, நிபந்தனைகளுடன் அரசு செயல்படுத்தி வருகிறது.

மறுபுறத்தில், கைத்தறித் தொழிலின் வளர்ச்சியை முன்னிறுத்தி தமிழகத்தில் 1.55 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இலவச வேட்டி – சேலை வழங்கும் திட்டம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 41 லட்சம் மாணவ – மாணவியருக்கு ஆண்டு தோறும் 4 கோடி விலையில்லா சீருடை வழங்கும் திட்டம், செப்டம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை கைத்தறித் துணி விற்பனைக்கு 30 சதவீத தள்ளுபடி மானியம் வழங்கும் திட்டம், விற்பனை ஊக்குவிப்புத் திட்டம் ஆகிய சமூகநலத் திட்டங்களும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை ஒருசேர நெசவாளர்களுக்கும், சமூகத்தில் இருக்கும் பல்வேறு தரப்பு மக்களுக்கும் பயனளிப்பதாக இப்போதும் இருக்கின்றன.இந்நிலையில்தான், நெசவாளர்களுக்கு வழங்கி வந்த வட்டி மானியத் திட்டம், தள்ளுபடி மானியம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை, மத்திய – மாநில ஆட்சியாளர்களால் கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது.

வட்டி மானியத் திட்டம்
நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வைத்துள்ள காலவரை வைப்புத் தொகையை (Fixed Deposit) கொண்டு, மத்திய கூட்டுறவு வங்கிகளில் நடைமுறை மூலதனத்தை கடனாகப் பெறும். இந்த கடனுக்கு, மத்திய கூட்டுறவு வங்கி நிர்ணயிக்கும் வட்டியில் 4 சதவிகிதத்தை மானியமாக அரசு வழங்கும். இதுவே வட்டி மானியம் ஆகும்.

இந்த வட்டி மானியத் தொகை விரைவாக வழங்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தில் ஒப்பளிப்பு செய்யும் அதிகாரம் கைத்தறி இயக்குநருக்கு வழங்கப்பட்டு, முன்பு மூன்று மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த வட்டி மானியத் தொகை நவம்பர் 2012 முதல் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.

வட்டிமானியத் திட்டத்தின் கீழ், கடந்த 2017-18-ஆம் ஆண்டில், ரூ. 17.02 கோடி வழங்கப்பட்டு உள்ளது. 2018-19ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில்கூட ரூ. 10.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் 1103 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பயன்பெற்று உள்ளனர்.
இந்நிலையில், காசுக்கடன் ஒப்பளிப்பைவிட அதிக அளவு நிரந்தர வைப்பு நிதி வைத்துள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு காசுக்கடன் வட்டி மானியத்தை நிறுத்த முடிவு செய்து, தமிழக அரசு அதிர்ச்சி அளித்துள்ளது. கடித எண்: 9348-டி1-2017-5 கைத்தறி துறை நாள் 07.03.2018 மூலம் வட்டிமானிய நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதனால், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தன்னுடைய இலாபத்தில், எதிர்காலத் தேவைக்காக சிறுகச் சிறுக சேமித்து, காலவரை வைப்புத் தொகை வைத்துள்ள சங்கங்களுக்கு வட்டி மானியத்தை நிறுத்துவது, கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக நடப்பதற்கு, தண்டனை அளிப்பது போன்றதாகும். மேலும் இது, கைத்தறித் தொழிலையும் சங்கத்தையும் முடக்கி விடும். எனவே, வட்டி மானியத்தை தொடர்ந்து வழங்கும் வகையில், முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, அரசை நிர்ப்பந்திக்க வேண்டிய பொறுப்பு நெசவாளர் கூட்டுறவு சங்க நிர்வாக குழுவிற்கு உள்ளது.

விற்பனை ஊக்குவிப்புத் திட்டம்:
கைத்தறித் துணி வகைகளின் விற்பனையை மேம்படுத்த தமிழக அரசு தள்ளுபடி மானியம் வழங்கி வருகிறது. கைத்தறித் துணிகளின் சில்லரை மற்றும் மொத்த விற்பனைக்கு ஆண்டு முழுவதும் 20 சதவிகிதம் தள்ளுபடி மானியம் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 2017-18ஆம் ஆண்டில் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2018-19ஆம் ஆண்டில் ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற சராசரி விற்பனையை கணக்கில் கொண்டு, அதில் 10 சதவிகிதத்தை மத்திய அரசும், மாநில அரசும் விற்பனை ஊக்குவிப்புக்காக, மானியமாக வழங்கி வருகின்றன. இதன் காரணமாக, 1300 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பயன்பெற்றன.
இந்நிலையில், தமிழக அரசு வட்டி மானியத்தை வெட்டிச் சுருக்கியதைப் போல, மத்திய மோடி அரசு தள்ளுபடி மானியத்தை வெட்டுவதற்கு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் ஜவுளித் துறை வளர்ச்சி ஆணையர் (கைத்தறி) கடித எண்: 13.05.2016-DCH/ CHOS/Cluster/11/07/2017 கடிதப்படி ஆண்டுக்கு ரூ. 30 இலட்சம் வரை விற்பனை செய்யக்கூடிய நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டுமே தள்ளுபடி மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பெரும்பான்மையான நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கடுமையாக பாதிக்கப்படும். ஓரளவு தொழில் வழங்கி வருகின்ற சங்கங்கள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
இதேபோல மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிக்கல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு நெசவாளர் குடும்பம் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ. 37 ஆயிரத்து 500 வரை மருத்துவக் காப்பீடு பெற்று வந்தது. இதை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் மத்தியில் ஆளும் மோடி அரசு நிறுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், கைத்தறிக்கு வழங்கி வருகின்ற மானியங்களை படிப்படியாக ரத்து செய்வதுதான் மத்திய – மாநில அரசுகளின் திட்டமாக மாறியிருக்கிறது.எனவே, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் இறங்கியிருக்கும் மத்திய – மாநில அரசுகளை எச்சரிக்கும் வகையில், அதன் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு, மத்திய தொழிற் சங்கங்கள் ஜனவரி 8,9 தேதிகளில் அறிவித்துள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் கைத்தறி நெசவாளர்களும் முழுமையாக கலந்துகொண்டு, உரிமையை நிலை நாட்டுவோம். பாரம்பரியமான கைத்தறித் தொழிலை பாதுகாப்போம்.

கட்டுரையாளர் : தலைவர், தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம், மதுரை மாநகர் மாவட்டம்

Leave a Reply

You must be logged in to post a comment.