===ஜி.ராமகிருஷ்ணன்===அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்                                         “இப்பத்தான் உங்க ஊர்ல மாட்டுக்கொட்டா எரியுது, எங்க ஊர்ல 50 வருசமா எரிஞ்சிக்கிட்டிருக்கு” – என 1988-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு அருகில் ஒரு கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மறைந்த தோழர் ஜி.வீரய்யன் பேசினார். அக்கூட்டத்தில் நானும், தோழர் கே.பாலகிருஷ்ணனும் கலந்து கொண்டோம்.

அந்த கிராமத்தில் தலித் விவசாயத்தொழிலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, கட்சியின் கொடியேற்றப்பட்டு விட்டது; மார்க்சிஸ்ட் கட்சி அந்தக்கிராமத்தில் பலப்பட்டு விடக்கூடாது என்ற கம்யூனிச எதிர்ப்பு நோக்கத்தில் ஆதிக்க சக்தியைச் சார்ந்த வசதி படைத்த ஒருவர் தனது மாட்டுக் கொட்டகையில் மாடுகளை அவிழ்த்து வெளியேற்றிவிட்டு கொட்டகைக்கு தீ வைத்தார். தானே தனது கொட்டகையை கொளுத்திவிட்டு கம்யூனிஸ்டுகள் மீது போலீசில் பொய்ப்புகார் கொடுத்து தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தில்தான் ஜி.வி. மேற்கண்டவாறு பேசினார்.

தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கீழத்தஞ்சை (நாகை, திருவாரூர் மாவட்டங்கள்) பகுதியில் 1930களில் துவங்கி சுதந்திரத்திற்குப் பிறகும் நிலச்சுவான்தார்களின் ஒடுக்குமுறையை எதிர்த்தும், தீண்டாமைக்கொடுமையை எதிர்த்தும் வீரமிக்க போராட்டம் நடக்கிற போது நிலச்சுவான்தார்களின் குண்டர்கள் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் பலரை படுகொலை செய்தனர், வீடுகளை தீக்கிரையாக்கியது போன்ற சம்பவங்களைத்தான் உதாரணமாகக் காட்டி தோழர் ஜி.வீரய்யன் அவர்கள் தன்னுடைய உரையில் அவருக்கே உரிய பாணியில் குறிப்பிட்டார். தமிழகத்தில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அங்கமாக இருந்து 60 ஆண்டுகளுக்கு மேல் தோழர் ஜி.வி கட்சிப்பணியாற்றியிருக்கிறார்.

1952ம் ஆண்டு தோழர் பி.சீனிவாசராவை ஒரு பொதுக்கூட்டத்தில் ஜி.வீரய்யன் சந்தித்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வந்த வீரமிக்க போராட்டமும், அப்போராட்டத்தில் தோழர் பி.எஸ்.ஆரின் பாத்திரமும் தோழர் ஜி.வீரய்யனை வெகுவாக ஈர்த்தது. இப்பின்னணியில்தான் தோழர் ஜி.வி. கட்சி முழுநேர ஊழியராக செயல்படத்துவங்கினார்.
கேரளத்தில் தோழர் இ.எம்.எஸ். தலைமையிலான அரசு நில உச்ச வரம்பு சட்டத்தை கொண்டு வந்து உபரி நிலத்தை விநியோகம் செய்தது போல், தமிழகத்திலும் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வர வேண்டுமென்றும், காங்கிரஸ் அரசு கொண்டு வந்த உச்சவரம்பு சட்டத்தை திருத்த வேண்டுமென்றும் நீண்ட போராட்டத்தை நடத்தி, அதனைச் சாதித்துக் காட்டியவர் தோழர் வீரய்யன்.

கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் மற்றும் விவசாய சங்கம், விவசாயத்தொழிலாளர்கள் சங்கத்தினுடைய தலைமைப்பொறுப்பில் இருந்தும் செயல்பட்ட தோழர் ஜி.வி. கட்சித்தோழர்களின் குடும்ப நலனை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார்.

தஞ்சை மாவட்ட மூத்த தலைவர் தோழர் என்.வெங்கடாசலம் நிலச்சுவான்தார் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரது குடும்பத்தைப் பாதுகாப்பதும் அவரின் 3 பிள்ளைகளை பாதுகாத்து படிக்க வைத்ததும் கட்சியின் கூட்டு முடிவென்றாலும், இதில் தோழர் ஜி.வி.யின் பாத்திரம் முக்கியமானது.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நடத்திய தீரமிக்க போராட்டத்தினால் தஞ்சை மாவட்டத்தில் ஒப்பீட்டளவில் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டுள்ளது. நிலமற்ற விவசாயத்தொழிலாளர்களுக்கு உபரி நிலம் விநியோகிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தொழிலாளர்கள் வீடுகட்டி வசித்து வந்த இடங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய போராட்டங்களில் தோழர் ஜி.வி. முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

தோழர் ஜி.வி.யின் வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அமையும்.
தோழர் ஜி.வீரய்யன் மறைவைத் தொடர்ந்து திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 8 சனிக்கிழமை அவரது படத்திறப்பு – புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்வையொட்டி தோழர் ஜி.வி. அவர்களின் அர்ப்பணிப்புமிக்க வாழ்க்கை வரலாற்றை கட்சித் தோழர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் விதத்தில் தீக்கதிர் நாளிதழ், இன்றைய இதழை, வண்ணக்கதிர் – தோழர் வீரய்யன் படத்திறப்பு சிறப்பிதழாக கொண்டு வருவது மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது. இந்த சிறப்பிதழ் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

You must be logged in to post a comment.