அடிலெய்டு
மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் அடிலெய்டு மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5:30 மணிக்குத் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது.ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் அசத்தலான பவுன்சர்களை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.
தொடக்க வீரர்கள் ராகுல் (2 ரன்கள்), முரளி விஜய் (11 ரன்கள்) ஆகியோர் சொதப்பினர்.அதிகம் எதிர்பார்த்த கேப்டன் கோலி (3 ரன்கள்) கம்மின்ஸ் பந்துவீச்சில் காவஜாவின் அசத்தலான கேட்ச்சால் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிய நங்கூர மன்னன் புஜாரா மைதானத்தின் தன்மையை புரிந்துகொண்டு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரஹானே (13 ரன்கள்) வந்த வேகத்தில் ஹாசில்வுட் பந்துவீச்சில் வெளியேற இந்திய அணி 41 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.அடுத்துக் களமிறங்கிய ரோஹித் சர்மா,புஜாராவுடன் ஜோடி சேர்ந்து ஏதுவான பந்துகளை அடித்து ஆடினார்.நீண்ட கால இடைவெளிக்குப் பின்பு டெஸ்ட் தொடரில் களமிறங்கிய ரோஹித் சர்மா சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 பவுண்டரி 3 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (25 ரன்கள்) ஒருநாள் தொடரை போலச் சிறிது நேரம் வேடிக்கை காட்டிவிட்டு வெளியேறினார்.அடுத்துக் களமிறங்கிய ஆல்ரவுண்டர் அஸ்வின், புஜாராவுடன் ஜோடி சேர்ந்து தனது தடுப்பாட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சோர்வடையச் செய்தார்.பல்வேறு நெருக்கடிகளைத் தாக்குப்பிடித்த புஜாரா அரைசதம் அடித்தார்.

அஸ்வினின் துல்லியமான தடுப்பாட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட புஜாரா விரைவாக ரன் குவித்தார்.ஆனால் அஸ்வின் (25 ரன்கள்), இஷாந்த் சர்மா (4 ரன்கள்) ஆகியோர் விரைவாக ஆட்டமிழக்கப் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா சதமடித்து அசத்தினார்.அடிலெய்டு சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 16 சதம் விளாசியுள்ள புஜாரா 5 ஆயிரம் ரன்களை கடந்தார்.கூடுதலாக 23 ரன்கள் சேர்த்த புஜாரா (123) ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.புஜாரா ஆட்டமிழந்தவுடன் முதல் நாள் ஆட்டத்தை முடிப்பதாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்தது.ஷமி,பும்ரா களத்தில் உள்ளனர்.ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹாசில்வுட்,லியோன்,ஸ்டார்க்,கம்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இரண்டாவது நாள் ஆட்டம் வெள்ளியன்று அதிகாலை 5:30 மணிக்குத் தொடங்குகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.