கோவை, டிச. 6 –

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்போம் என புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 62 ஆவது நினைவுநாளில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி கோவை மக்கள் மேடையின் சார்பில் வியாழனன்று நடைபெற்றது.

இந்திய அரசியலைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 62 ஆவது நினைவு நாள் டிசம்பர் 6 ஆம்தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதன்ஒருபகுதியாக கோவையில் இடதுசாரி கட்சிகள், பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகள் மற்றும் முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் இனைந்த கோவை மக்கள் மேடையின் சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை பவர்ஹவுஸ் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோவை மக்கள் மேடையின் ஒருங்கினைப்பாளரும் சிஐடியு மாவட்ட தலைவருமான சி.பத்மநாபன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் பங்கேற்று அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் அடிப்படை உரிமைகளான சோசலிசம், மதச்சார்பின்மை, இடஒதுக்கீடு, மாநில உரிமைகள், பாலின சமத்துவ உரிமைகளுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட வகுப்புவாத அமைப்புகள் ஊறுவிளைவிக்கின்றன. மேலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை கொடுமைகள், வன்முறைகள், கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், ஆணவப்படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் உழைக்கும்மக்களின் மீதான அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் முடிவுகட்டி, மக்களின் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் இந்திய அரசியலைப்பின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும் அண்ணல் அம்பேத்கர் வழியில் தொடர்ந்து போராடவோம் என்கிற உறுதிமொழியை ஏற்றனர். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாநில துணை தலைவர் எஸ்.அறுமுகம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனேகரன், சிஐடியு ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் பி.கே.சுகுமாரன், சிபிஐ(எம்எல்) மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் ஆறுச்சாமி, திராவிடர் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் வெண்மணி, திராவிடர் விடுதலைக்கழகத்தின் நேருதாஸ் மற்றும் மலரவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை

இதேபோல தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கோவை உணவு கழக வளாகத்தில்  உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொது செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், பொருளாளர் சந்திரசேகர், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ்ராஜா, அம்பேத்கர் பயிற்சி மையத்தின் ஒருங்கினைப்பாளர் கனேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.