தருமபுரி : வீட்டுவரி ரசீது பெற செட்டிகரை ஊராட்சி செயலாளர் லஞ்சம் கேட்பதாக பாதிக்கப்பட்ட நபர் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். தருமபுரி வட்டம், செட்டிகரை கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.பி.சுப்பிரமணி. இவர் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். செட்டிகரையிலுள்ள இவருடைய தந்தை பெருமாள் என்பவரது பெயரில் நத்தம் நிலவரி பட்டா வழங்கப்பட்டு பின்னர் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டது. இந்நிலையில், இவருடைய தந்தை பெருமாள் இறப்பதற்கு முன் இடம் சுப்பிரமணிக்கு உயில் மூலம் மாற்றப்பட்டது. இந்நிலையில், சுப்பிரமணி கடந்த 2016-17 ஆம் ஆண்டுக்கான வீட்டுவரி கட்டணத்தை ஊராட்சி செயலாளரிடம் வழங்கியுள்ளார். ஆனால், அதற்கான ரசீது வழங்கவில்லை. இதன்பின் சமீபத்தில் 2017-18 ஆம் ஆண்டுக்கு வீட்டுவரி கட்டணத்தை ஊராட்சி செயலாளரிடம் வழங்கியுள்ளார். ஆனால், அதற்கான பணத்தை ஊராட்சி செயலாளர் பெற மறுத்து அலைக்கழித்து வந்துள்ளார்.

அதேநேரம், அதே கிராமத்தைச் சேர்ந்த சில புரோக்கர்கள் ஊராட்சி செயலாளருக்கு லஞ்சமாக பணம் கொடுத்து ரசீது பெற்று தந்து வரும் நிலையில், தன்னிடமும் லஞ்சப்பணம் கேட்டு ஊராட்சி செயலாளர் நிர்ப்பந்தப்படுத்தி வருகின்றனர். எனவே, வீட்டு வரிக்கான பணத்தை பெற மறுத்துவரும் ஊராட்சி செயலாளர் சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், என் வீட்டிற்கு வீட்டு வரி ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் செவ்வாயன்று சுப்பிரமணி புகார் மனு அளித்தார். இம்மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: