சேலம் : மரவள்ளி கிழங்குக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சேலத்தில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் தொடர்பான முத்தரப்பு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான விவசாயிகள், அரசு அலுவலர்கள், சேகோ மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது, ஜவ்வரிசியில் மக்காச்சோளம் மாவு, ரசாயனம் போன்றவை அதிகமாக கலப்படம் செய்யப்படுவதால் மரவள்ளிக்கிழங்கின் விற்பனை குறைந்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல், கரும்பு, மஞ்சளை போன்று மரவள்ளி கிழங்குக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு சேகோ ஆலை உரிமையாளர்கள் பதிலளித்தனர். அப்போது விவசாயிகளுக்கும், சேகோ ஆலை உரிமையாளருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதன்பின் மரவள்ளி கிழங்குக்கு நியாயமான விலை கிடைப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனமாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: