திருப்பூர் : மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஆர்.லட்சுமணசாமி தலைமை ஏற்றார். மக்காச் சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25ஆயிரம் நஷ்டஈடு கேட்டும், தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்துறை இலவசமாக ஒட்டுண்ணி மற்றும் உரம் வழங்க வலியுறுத்தியும், பி.ஏ.பி திட்டத்தில் 5ஆம் சுற்று தண்ணீரை உடனே திறந்துவிட்டு நிலத்தடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் முழங்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக ஜி.வெங்கடேஷ், எம்.ராஜகோபால் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகிகள் அ.பாலதண்டபாணி, ஏ.ராஜகோபால், ஆ.தங்கவடிவேல், சி.ஜே.ஸ்ரீதர், எம்.சுந்தர்ராஜ் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வெ.ரங்கநாதன் வாழ்த்திப் பேசினார். ஆர்ப்பாட்ட முடிவில் குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மகாலிங்கத்திடம் நிவாரணம் கோரி மனு அளிக்கப்பட்டது. இவ்வியக்கத்தில் திரளாக விவசாயிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: