மன்னார்குடி:
பகல்ல பள்ளிக்கூடம் நடக்கும், ராத்திரி பள்ளிக்கூடத்திலதான் நாங்க எல்லாம் தங்குவோம். 15-ந் தேதி ராத்திரி விடிஞ்சா 16 வெள்ளிக்கிழம புயல் அடிச்சு வெள்ளியோட வெள்ளி எட்டு மறு வெள்ளியோட வெள்ளி 16 இன்னக்கி 4-ந் தேதி 19, 20 நாளா கேக்க நாதியில்லாம குழந்தை குட்டிகளை வச்கிக்கிட்டு நடுரோட்டில நிக்கிறோம். மண்ணெண்ணை கூட இல்ல யாரும் வந்து பாக்கல. கொசு பத்தியை கொளுத்திக்கிட்டு ராத்திரியில அல்லாடிக்கிட்டு இருக்கோம். அந்த பெண்களின் தழுதழுத்த குரல் மனதை பிசைந்தது.

திருவாரூர் மாவட்டம் பாலயக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு முன்பாக தீக்கதிர் செய்தியாளரும் கோட்டூர் ஒன்றியக் குழு உறுப்பினர் ஸ்டாலின் மற்றும் கட்சி உறுப்பினர்களோடு பள்ளிக்கூடத்திற்கு முன்பு நடுரோட்டில் அம்மக்களை சந்தித்தோம். அப்போதுதான் அவர்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் தங்கள் அவல நிலையை கூறினர். டிசம்பர் 5 காலை தொலைபேசியில் ஸ்டாலினை கேட்டபோது, இன்னமும் அந்த பள்ளியில்தான் அந்த மக்கள் தங்கியிருப்பதாக கூறினார். அவர்களில் சிலர் பகலில் 100 நாள் வேலைக்கு செல்கிறார்கள். சிலர் வேறு கூலி வேலைக்கு செல்கிறார்கள். மீதமுள்ளவர்கள் வல்லூர் செல்லும் தார்ச் சாலையில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது வீடுகள் குடியிருக்க தகுதியின்றி முற்றிலும் சேதமடைந்து விட்டது. அவர்களது கோரிக்கைகள் மிகவும் எளிமையானது. அடிப்படையானது. வசிப்பதற்கு வீடு வேண்டும். 100 நாள் வேலை செய்பவர்களுக்கு பழைய பாக்கியோடு கூலியை அதிகப்படுத்தி தர வேண்டும். தண்ணீர் வேண்டும். மண்ணெண்ணெய் வேண்டும். உடுத்தியிருப்பதை தவிர புயலில் மழையில் சேற்றில் எல்லாம் நாசமாகிவிட்டது. உடுத்துவதற்கு துணி வேண்டும். அதற்கு காசு-பணம் வேண்டும். இவைகள்தான் அவர்களது கோரிக்கைகள். சொந்த நாட்டில் அல்ல சொந்த கிராமத்திலேயே அகதிகள் போல் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் கூறியதில் ஒரு விஷயம் நம்மை சுட்டது. எங்கிருந்தோ அரிசி பருப்பு பொருட்கள் வேனில் எந்த மகராசனோ கொடுக்கிறார்கள். காரில் வருது; ஆனா எங்க அரிசனத் தெருவுக்கு வர்ரதில்ல ரோட்டிலே வாங்கிக்கிடுறாங்க என்றார் ஒரு பெண்மணி.

அந்த பள்ளியில் தங்கியிருப்பவர்களில் ஒரு பெண்மணிக்கு தோப்படித் தெருவில் கூரைக்கட்டு வீடு இருந்தது. பெரும் ஆலமரம் விழுந்து அந்த வீடு தரைமட்டமானது. புயலில் அந்த வீட்டிற்குள் சிக்கிக் கொண்ட தம்பதியினரோடு அந்த இடத்திற்கு சென்றோம். ஏதோ காட்டுக்குள் செல்வது போல கஜா புயல் எல்லாவற்றையும் பிடுங்கிப் போட்டிருந்தது. தாறுமாறாய் கிடந்த மரம் செடி, கொடிகளில் நுழைந்து அந்த இடத்தை அடைந்தோம். அதிர்ச்சியாக இருந்தது. அவர்களுக்கு காயங்கள் இருந்தன.

பாலயக்கோட்டை புதுக்குடி கிராமங்கள் மன்னார்குடி – திருமக்கோட்டை சாலையிலிருந்து 4 கி.மீ தொலைவிலும் மன்னார்குடி – முத்துப்பேட்டை சாலையிலிருந்து 4 கி.மீட்டருக்கு உட்புறத்தில் தனித்து இந்த கிராமங்கள் உள்ளன. இந்த அவலம் மீடியாக்கள் மூலமாக வெளியே முழுமையாக தெரியவில்லை. இந்த பகுதிக்கு மின் இணைப்புகளை மீண்டும் ஏற்படுத்த மின் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்படவேண்டும்.

மாவட்ட நிர்வாகம், வருவாய் வட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை ஒன்றிய நிர்வாகம் உடனே அந்த பகுதிக்கு விரைந்து செல்ல வேண்டும். வடக்குத் தென்பறை, தெற்கு தென்பறை, சமுதாயம் என வல்லூர் வரும் வழியெல்லாம் தென்னை மரங்கள் 100-க்கு 95 சாய்ந்து தரையோடு கிடந்தன. நெல்லு பயிர் அழிந்தால் ஆறுமாசம், வாழை அழிந்தால் ஒரு வருடம் திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதி என்பதால் நான்கைந்து ஏக்கர் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் 4,5 ஏக்கர் வைத்திருந்த சிறு,குறு,நடுத்தர விவசாயிகள் நெல் சாகுபடியை கைவிட்டுவிட்டு தென்னைக்கு மாறினர். அந்த குடும்பங்கள் இப்போது பரிதவித்து நிற்பதை டிஜிட்டல் பதிப்பிற்காக வீடியோ எடுத்துக் கொண்டோம்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய தாழ்த்தப்பட்ட நடுத்தர மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அவர்களது வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். இதில் அதிமுக அரசு தவறுமேயானால் மத்திய நிதியை வழங்காமல் பாஜக துரோகம் இழைக்குமானால், 2019 தேர்தலில் இவர்கள் டெபாசிட் இழப்பது நிச்சயம். அதற்கான மக்களின் கோபம் தெளிவாகவே டெல்டா கிராமங்களில் தெரிகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.