நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் பலியாயினர். ஒருவர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியை அடுத்துள்ள சாண்டலார் புரத்தைச் சேர்ந்த சமயன் (எ) சாய்ராம் (65), கவுண்டன்பட்டியைச் சேர்ந்த முருகன், பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் ஆகியமூவரும் பள்ளபட்டியில் சட்டவிரோதமாக விற்ற சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர்.

குடித்த சிறிது நேரத்தில் மூன்று பேரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். ருகிலிருந்தவர்கள் மூவரையும் மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகனும்,சமயனும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தங்கப்பாண்டி யன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கள்ளச்சாராயத்தால் இருவர் பலியானது குறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த கவுண்டன்பட்டியை சேர்ந்த முருகனுக்கு பஞ்சு என்ற மனைவியும் இரண்டு மகள்களும் ஒருமகனும் உள்ளனர் சாண்டலார்புரத்தைச் சேர்ந்த சமயனுக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.சம்பவம் நடைபெற்ற கிராமத்தில் தென்மண்டல டிஐஜி, திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.கள்ளச்சாராயத்திற்கு இருவர் பலியான சம்பவம் பள்ளபட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: