திருப்பூர் : திருப்பூர் அனைத்து பனியன் சங்கக் கூட்டம் ஏஐடியுசி பனியன் சங்க அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஐஎன்டியுசி பனியன் சங்க செயலாளர் பி.கே.என்.தண்டபாணி தலைமை வகித்தார். இதில் தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், மக்களுக்கு விரோதமாகவும் செயல்படும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையால் திருப்பூர் பனியன் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் பனியன் தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய பாஜக அரசை கண்டித்து ஜனவரி 8,9ந் தேதிகளில் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இந்த பொது வேலை நிறுத்ததில் திருப்பூரில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்கள் பங்கேற்பது, டிசம்பர் 18ந் தேதி ஆயத்தக் கூட்டம் நடத்துவது, அதனைத் தொடர்ந்து வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பு கடிதத்தை அனைத்து பனியன் நிறுவனங்களுக்கும் கொடுப்பது, பொதுவேலை நிறுத்தை வெற்றிகரமாக்குவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சிஐடியு பனியன் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் என்.கேகர், கே.என்.இசாக், தொமுச பனியன் சங்க செயலாளர் கே.ராமகிருஷ்ணன், ஜி.பாலசுப்பிரமணியன், எம்எல்எப் மனோகரன், எச்எம்எஸ் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.