சேலம் : சேலத்தில் நாய்கள் கடித்து குதறிதால் 4 வயது சிறுவன் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அதேநேரம், மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே இச்சம்பவத்திற்கு காரணமென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சேலம் அன்னதானப்பட்டி அருகில் உள்ளது நெத்திமேடு. இங்குள்ள குமர கவுண்டர் தெருவை சேர்ந்தவர் விமல். தங்க நகை ஆசாரியான இவரின் மகன் தக்க்ஷாந்த் (4). தனியார்பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி.படித்துவருகிறார். இந்நிலையில், தனது வீட்டுக்கு அருகில் சிறுவன் தக்க்ஷாந்த் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அங்கு கூட்டமாக வந்த நாய்கள் சிறுவன் தக்க்ஷாந்த் முகத்தில் கடித்து குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து நாய்களை விரட்டி சிறுவனை மீட்டனர். இதன்பின் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

இதில் நாய் கடித்ததால் சிறுவனின் கன்னம் மற்றும் கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், சிறுவனின் முகத்தில் காயம் அதிகமாக உள்ளதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக, சிறுவன் வசிக்கும் நெத்திமேடு பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக காணப்படுவதாகவும், இந்த நாய்கள் பொது மக்களையும், சிறுவர்களையும் அவ்வப்போது கடித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் சேலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுதொடர்பாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியதன் காரணமாகவே தற்போது சிறுவன் தக்க்ஷாந்த் பாதிக்கப்பட காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், நெத்திமேடு பகுதி மட்டுமல்லாமல் சேலம் மாநகராட்சி பகுதிமுழுவதும் தெருநாய்களால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆகவே, இந்த தெரு நாய்களை உடனே பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: