தருமபுரி : சரவணா ஸ்பின்னிங் மில் தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட சிஐடியு சங்க நிர்வாகிகளுக்கு மீண்டும் பணி வழங்க ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. தருமபுரியை அடுத்துள்ள தடங்கம் கிராமத்தில் கடந்த 21 ஆண்டுகளாக சரவணா ஸ்பின்னிங் மில் என்ற தனியார் பஞ்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் 250 பெண் தொழிலாளர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், இந்த ஆலையில் எவ்வித தொழிலாளர் நலச்சட்டங்களும் அமல்படுத்த மறுத்து வருவதுடன், கொத்தடிமைகள் போல் குறைந்த சம்பளத்திற்கு வேலை வாங்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தின் தலைமையில் அணி திரண்டனர். மேலும், கடந்த நவ.27 ஆம் தேதியன்று சிஐடியு சார்பில் பஞ்சாலை தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆலை நிர்வாகம் அன்றைய தினம் மதியமே ஆலையின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, அங்கு பணியாற்றி வந்த சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட சில தொழிலாளர்களை ஆலையை விட்டு மிக மோசமான முறையில் விரட்டியுள்ளனர்.

இதையடுத்து அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் கடந்த ஒன்பது நாளாக ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். மேலும், மேற்கண்ட பிரச்சனையில் தொழிலாளர்துறை தலையிட்டு அனைத்து பணியாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்க அறிவுறுத்தியது. ஆனால் ஆலை நிர்வாகம் சங்க தலைவர்களை பணிநீக்கம் செய்துவிட்டதாக அறிவித்தது. சரவணா ஸ்பின்னிங் மில்லின் இந்த அராஜக நடவடிக்கையை கண்டித்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவலியுறுத்தியும் சிஐடியு தருமபுரி டிஸ்ட்ரிக் டெக்ஸ்டைல்ஸ் மில் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன்,, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.நாகராசன், கட்டுமான சங்க மாநில துணைத்தலைவர் எம்.மாரிமுத்து, மாவட்ட நிர்வாகிகள் ஏ.தெய்வானை, சி.ராஜி, சி.ரகுபதி, எஸ்.சண்முகம், பி.ஜிவா, ஆர்.செல்வம், எம்.ராஜேந்திரன், எம்.ரங்கநாதன், சி.சுரேஷ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பொருளாளர் சி.முரளி நன்றி கூறினார்.

பேச்சுவார்த்தை
இதனிடையே, தருமபுரியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அலுவலர் திருநந்தன் முன்னிலையில் சிஐடியு மாநிலதுணைதலைவர் எம்.சந்திரன், மாவட்டசெயலாளர் சி.நாகராசன், மாவட்ட துணைத் தலைவர் ஜி.வெங்கட்ராமன் மற்றும் சரவணா ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பழிவாங்கப்பட்ட 3 தொழிலாளர்களுக்கும் எந்த நிபந்தனையுமின்றி வரும் 17 ஆம் தேதி முதல் மீண்டும் வேலை வழங்குவது. சிஐடியு தொழிற்சங்கம் வைக்க அனுமதிப்பது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.