திருப்பூர் : திருப்பூரில், கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி புதனன்று நிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.50கோடி மதிப்பிலான பனியன் துணிகள் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. பின்னலாடை நிறுவனங்களின்சார்பு நிறுவனங்களான நிட்டிங், பிரிண்டிங், டையிங், எம்ப்ராய்டரி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலமாகவே பின்னலாடை உற்பத்தி முழுமைபெறுகிறது. இத்தகைய சார்பு நிறுவனங்களில் முக்கியமானதாக நிட்டிங் துறை உள்ளது. நூல்களை துணிகளாக மாற்றி உற்பத்தி செய்யும் ஜாப்-ஒர்க் நிறுவனங்களுக்கு பனியன் நிறுவனங்களிடம் கூலியை உயர்த்தி தர பலமுறை வலியுறுத்தப்பட்ட நிலையில் ஜிஎஸ்டி போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி கூலி உயர்வை பின்னலாடை நிறுவனங்கள் தவிர்த்து வந்தன.

மேலும், 15 ஆண்டுகளாக ஒரே கூலி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளர் கூலி, மூலப்பொருட்கள் விலை உயர்வால் நிட்டிங் பனியன் துணி உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே உயர்த்தப்பட்ட புதிய கூலியை வழங்க வலியுறுத்தி புதன் மற்றும் வியாழக்கிழமை என இரண்டு நாட்கள் பனியன் துணி மற்றும் காலர் உற்பத்தி செய்யும் நிட்மா, சிம்கா சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்த அறிவிப்பால் பனியன் துணி மற்றும் காலர் தயாரிக்கும் 900 நிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி மதிப்பிலான பனியன் துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: