திருப்பூர் : பெருமுதலாளிகள், கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக மத்தியில் ஆளும் மோடி அரசு கொள்கைகளை கண்மூடித்தனமாக அமல்படுத்தி வரும் நிலையில், கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சிமிகு வர்க்கப் போராட்டமே இந்தியாவைக் காப்பாற்றும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறினார். குடிமங்கலம் ஒன்றியம் வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த என்.ஈஸ்வரன் அந்த வட்டாரத்தில் வாலிபர் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தை கட்டுவதில் தீவிர முனைப்புடன் ஈடுபட்டு வந்தார். அந்த சமயத்தில் 1981ஆம் ஆண்டு பஞ்ச நிவாரணப் பணிகள் நடைபெற்றதில் அப்பகுதி ஏழை கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். பெரிய விவசாயிகளின் காடுகளில் வேலைக்குச் செல்லாமல் இந்த பணிக்குச் சென்றதால், அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய செல்வாக்குப் படைத்தவர்கள் விவசாயத் தொழிலாளர்களின் மீது தாக்குதலை ஏவினர். இதில் ஈஸ்வரன் கொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக குடிமங்கலம் ஒன்றியம் வெள்ளியம் பாளையத்தில் தியாகி என்.ஈஸ்வரனின் 37ஆவது நினைவு தினப் பொதுக்கூட்டம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி (சனியன்று) நடைபெற்றது. இதில் உரையாற்றியபோது செ.முத்துக்கண்ணன் மேலும் கூறியதாவது: செங்கொடி இயக்கத்தின் ஒரு ஊழியரையோ, தலைவரையோ கொலை செய்வதன் மூலம் இந்த இயக்கத்தை வீழ்த்திவிட முடியாது. தில்லியில் விவசாயிகள் எழுச்சிமிகு போராட்டங்கள் நடத்தியுள்ளனர். மத்தியில் ஆளும் அரசு எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாக நாட்டைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட், பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது. நாட்டைச் சீரழித்து சிதைக்கக்கூடிய இந்த கொள்கைகளுக்கு மாற்று உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டமே ஆகும். கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அணிதிரண்டு போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம்தான் இந்த பிற்போக்கு சக்திகளை முறியடித்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும், விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மீட்க முடியும் என்று கூறினார்.

இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.சசிகலா, மாவட்டக்குழு உறுப்பினர் வெ.ரங்கநாதன், கமிட்டி உறுப்பினர்கள் எம்.சுந்தர்ராஜ், ஏ.தங்கவடிவேலன், ஆர்.ஓம்பிரகாஷ் ஆகியோரும் உரையாற்றினர். இந்த நிகழ்விற்கு கே.பழனிசாமி தலைமை ஏற்க நிறைவில் எம்.சுப்பிரமணியம் நன்றி கூறினார். முன்னதாக, வெள்ளியம்பாளையம் ஈஸ்வரன் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.