மதுரை : கஜா புயல் பாதிப்பு விவரங்களை கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி சேகரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சாய்ந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன், அவசர வழக்காக தாக்கல் செய்த மனுவில் கஜா புயலால் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாகவும், சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். மத்திய அரசின் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம் களை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அமைக்க வேண்டும். மின் இணைப்பை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்புப் பணியில் முப்படையினரையும், துணை ராணுவப் படையினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

புயல் நிவாரணப் பணிகள், குறித்து தஞ்சாவூர் மாவட்டம் பேராகூரணியை சேர்ந்த முருகேசனும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் கடந்த 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புயலால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கஜா புயல் இடைக்கால நிவாரணத்தை ஒரு வாரத்துக்குள் அறிவிக்க வேண்டும், பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர். இந்த வழக்குகள் டிச. 5-ஆம் தேதி (புதன்) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கஜா புயலில் பாதித்த பகுதிகளில் 100 சதவீதம் குடிநீர் வசதி ஏற்படுத் தப்பட்டுவிட்டது.

இதுவரை 97 ஆயிரத்து 200 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள் ளன. முழுமையாக மின் விநியோகம் செய்ய ஒரு வாரம் ஆகும் என்று அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது. மேலும் புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்று கூறி அரசின் நிவாரணப் பொருட் களை திருப்பி அனுப்புவதாக தகவல் வந்துள்ளது. ஆதாரங்கள் இல்லை என்றாலும் நிவாரணப் பொருட்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் புகைப்பட ஆதாரம் இல்லை என்று கூறி நிவாரணப் பொருட்களை திருப்பி அனுப்பக் கூடாது. கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி பாதிப்பு விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.