புதுக்கோட்டை:
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் கூட்டுறவு, தேசிய வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் (மைக்ரோ பைனான்ஸ்), மகளிர் சுய உதவிக்குழுக்களில் பெற்றுள்ள அனைத்து விதமான கடன்களை யும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.

கஜா புயல் பாதித்த மாவட்டங்களை இயற்கைப் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்; போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் சார்பில் புதனன்று ஆவேசமிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புயல் பாதித்த புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் நிவாரணக் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனுக்கொடுத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் பங்கேற்றனர்.
20 தாலுகாக்களில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புதுக் கோட்டை மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் மனுக்கள் கொடுக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி யில் நடைபெற்ற இயக்கத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்றார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் பங்கேற்று பேசினார். நாகப்பட்டினத்தில் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், கீழ்வேளூரில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பட்டுக்கோட்டையில் விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

பெ.சண்முகம் பேட்டி
ஆலங்குடியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்குப் பிறகு ஆலங்குடி தாலுகா வில் உள்ள வடகாடு, மாங்காடு, அணவயல், கீழாத்தூர், வள்ளிகாடு, வேங்கிடக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புயல் பாதித்த மற்ற பகுதிகளைவிட இந்தப் பகுதிகள் மிகக் கொடுமையாக உள்ளது. மற்ற இடங்களில் தென்னந் தோப்பு இருந்தால் அதில் வேறு விவசாயம் இருக்காது. ஆனால், இந்தப் பகுதிகளில் தென்னை மரத்துக்கு இடையில் பலா, தேக்கு, பாக்கு மரங்களையும் வளர்த்து வருகின்றனர். மேலும் அந்த மரங்களுக்கு இடையில் மிளகுக் கொடிகளையும் வளர்த்துள்ளனர். இப்படி ஒரே தோட்டத்தில் பல்வகைப் பயிர்களை வளர்த்து சாதனை படைத்த விவசாயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தென்னந்தோப்பு இருந்தால் அந்த மரங்களை மட்டுமே கணக்கில் கொள்கின்றனர். மேற்படி பலா, தேக்கு, பாக்கு, மிளகு போன்ற இழப்புகளுக்கு யார் நிவாரணம் தருவது? மேலும், ஒரு ஹெக்டேருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே அரசு கணக்கில் கொள்கிறது. ஆனால், இந்தப் பகுதியில் ஒரு ஏக்கருக்கே 120 தென்னை மரங்களும், அதற்கு ஊடு பயிராக வேறு பல்வேறு வகையான மரங்களையும் வளர்த்து வந்துள்ளனர். அதிகாரிகள் மேற்கண்ட மரங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.குத்துமதிப்பாக குறிக்காதீர்!
பொதுவாக கணக்கெடுக்க வரும் அதிகாரிகள் ஊரின் மையத்தில் அமர்ந்துகொண்டு குத்துமதிப்பாக குறித்துக் கொண்டு போவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது அவர்களை வேதனை அடையச் செய்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட தோட்டத்திற்கு நேரடியாகச் சென்று பாதிப்புகளை துல்லியமாகக் கணக்கெடுக்க வேண்டும். கணக்கெடுக்கும் பணியை கண்காணிக்கிறேன் எனக்கூறி காலம் தாழ்த்தக்கூடாது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் முடித்து விரைவாக விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடன் தள்ளுபடி உடனடித் தேவை
புயல் பாதித்த மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள், நுண்
நிதி நிறுவனங்கள் (மைக்ரோ பைனான்ஸ்), மகளிர் சுய உதவிக்குழுக்களில் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். இல்லையென் றால் கிடைக்கின்ற சொற்ப நிவாரணத்தையும் மேற்படி கடன் கொடுத்தவர்கள் பறித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்படும். அவர்கள் இப்பொழுதே வட்டமடித்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

மக்கள் இன்னமும் குடிநீர், மின்சாரம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நிவாரணப்பணிகளையும், மின் இணைப்பு உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்த வேண்டும். அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போது
மானது அல்ல. விவசாயிகள் சங்கம் கோரியுள்ள அளவுக்கு அனைத்து விதமான நிவாரணத் தொகைகளையும் உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசு பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு பெ.சண்முகம் குறிப் பிட்டார். (ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.