ஜலந்தர் (பஞ்சாப்), டிச.5-

மத்திய மதவெறி ஆட்சியாளர்கள் நாட்டை இந்து ராஷ்ட்ரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக, மதவெறித் தீயைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் கூறினார்.

தோழர் ஹர்கிசன்சிங் சுர்ஜித் பத்தாம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் அவரது பிறந்த ஊரான பண்டாலா மஞ்ச்சிகி (ஜலந்தர்) என்னுமிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு முகமது சலீம் பேசியதாவது:

“தேசபக்தர்கள், நாட்டில் அனைத்து மதத்தினரையும், அனைத்து சாதியினரையும், அனைத்து இனத்தினரையும் ஒன்றுபடுத்தி, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கினார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ்/பாஜக மதவெறியர்களோ நாட்டை தங்களின் வெறிபிடித்த இந்து ராஷ்ட்ரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக, நாட்டு மக்கள் மத்தியில் வெறுப்பு உணர்வை ஊட்டி, வன்முறை வெறியாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.”

இவ்வாறு முகமது சலீம் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாப் மாநில செயலாளர் சுக்விந்தர் சிங் சேகான் இக்கூட்டத்தில் பேசியதாவது:“ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன்கீழ் இயங்கும் அமைப்புகளும் 1992ஆம் ஆண்டைப்போல் ஒரு நிலைமையை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய மோடி அரசாங்கம் அனைத்து முனைகளிலும் படுதோல்வி அடைந்திருக்கிறது. 2014இல் அளித்த வாக்குறுதி எதையுமே அது நிறைவேற்றிடவில்லை. இதன்காரணமாக நாட்டில் அதிகரித்துள்ள வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் தற்கொலைகள் ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக மதவெறி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன. அதேபோன்று பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கமும் தான் அளித்த உறுதிமொழிகள் எதையும் நிறைவேற்றிடவில்லை.

இவ்வாறு மக்கள் விரோத, தேச விரோதக் கொள்கைகளைப் பின்பற்றிவரும் மத்திய, பஞ்சாப் மாநில அரசாங்கங்களுக்கு எதிராக வரும் 2019 ஜனவரி 28 அன்று லூதியானாவில் வரலாறு படைத்திடும் விதத்தில் பஞ்சாப்பின் இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து பேரணி நடத்தவிருக்கின்றன.”

இவ்வாறு சுக்விந்தர் சிங் சேகான் பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: