தீபத் திருநகராம் திருவண்ணாமலையில், ஸ்கேன் சென்டர்களில், கருவி லிருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து சொல்வதும், கருக்கலைப்பு நடத்தப்படுவதும் தொடர்ந்து நடத்தப்படும் நிகழ்வாக மாறிவருகிறது. கருவிலிருக்கும் சிசுவின் வளர்ச்சி மற்றும் குறைபாடுகளை அறிவதற்கு பயன்படும் அல்ட்ராசவுண்டை சிசுவின் பாலினம் அறிய பயன்படுத்தி பெண் சிசுவாய் இருந்தால் அதை கருக்கலைப்பு செய்யும் கொடுமைகள் பரவலாக அரங்கேறியது. இதை தடுப்பதற்காக கடந்த 1994 ஆம் ஆண்டு பி.என்.ட்டி.டி சட்டம் ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், இந்த சட்டப்படி சிசுக்கொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது என்பது மிகச்சொற்பமாகவே நிகழ்கிறது. தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளும், இத்தகைய சூழலை மாற்றியமைக்க வேண்டிய ஆட்சியாளர்களும் மெத்தனப்போக்கோடு நடந்து கொள்வதால், பல்லாயிரக்கணக்கான கருக் கொலைகள் இந்த சமூகத்தில் நடந்தேறி வருகிறது. திருவண்ணாமலை செங்குட்டுவன் வீதியில் வசிக்கும் தமிழ்ச்செல்வனின் (53) மனைவி ஆனந்தி (51). இவருக்கு, சட்ட விரோதமாக கருவில் உள்ள சிசுக்களின் பாலினத்தைக் கண்டறிந்து கருக் கலைப்பு செய்வது தொழிலாக அமைந்தது.

இந்த குற்றங்களுக்காக கடந்த 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர். கருக்கொலை செய்யும் தொழிலை கைவிடாமல், தொடர்ந்துள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஊரக மற்றும் மருத்துவ நலப்பணிகள் அலுவலக கண்காணிப்பாளர் தலைமையிலான சிறப்புக் குழுவினர் திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு, பாலினம் கண்டறிதல் மற்றும் சட்ட விரோத கருக் கலைப்புக்காக செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட உட்கட்டமைப்பு வசதிகளை கண்டனர். இரவு நேரங்களில் கருக்கலைப்பு மற்றும் பாலினம் கண்டறிதல் ஆகிய சட்ட விரோத செயல்களில் ஆனந்தி ஈடுபட்டுள்ளதாக சிறப்புக் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆனந்தி, அவரது கணவர் தமிழ்ச்செல்வன், மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். ஸ்கேன் மையத்துக்கு சீல் வைத்தனர்.

ரகசிய நெட்வொர்க்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பொன்னுசாமி நகர் பகுதியில், சிறிய அளவிலான ரகசிய அறைகளை உருவாக்கி, வெளித்தோற்றத்தில் வீடு போல் ஸ்கேன் சென்டர் அமைக்கப்பட்டிருந் ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.மருத்துவரிடம் சில ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தி, ஸ்கேன் சென்டர் தொடங்கி இதுபோல் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். குழந்தையின் பாலினம் குறித்து தெரிந்து கொள்ள 5 ஆயிரம், கருக்கலைப்பு செய்வதற்கு 50 ஆயிரம் என வசூலிக்கப் பட்டதும், இங்கு கருக்கலைப்பு செய்வதற்காக கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வருவதும், இதற்காக பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் இருப்பதும், அவர் கள் கமிஷனை பெற்றுக் கொண்டு இங்கு வாடிக்கையாளர்களை அழைத்து வருவதுமான தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள் ளது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசுக்கொலைகளை ஆனந்தி செய்திருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

போராடும் மாதர் சங்கம்
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவர் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இனியும் பெண் சிசுக்கொலை தொடராமல் தடுத்திட வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கடந்த பிப் 12 ஆம் தேதி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சிசுக்கொலை தொடர்பாக, திருவண்ணாமலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி கூறியபோது, பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் இந்த இனப்படுகொலைகள், தென் மாவட்டங்களில் பரவலாக நடத்தப்பட்டது. தற்போது, கிருஷ்ணகிரி, தருமபுரி, குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டங்களில் தொடர்ந்து நடப்பது வேதனைக்குரியது. பெண் குழந்தையின் கருத்தரிப்பு, பிறப்பு, படிப்பு, தொழில், திருமணம், குடும்ப மற்றும்பொது வாழ்வில் சமநிலையின்மை காரணமாக இந்த கொடுமைகள் நடைபெறுகிறது. இதை தடுக்க வேண்டிய தமிழக அரசு, செயல்படாத நிலையில் உள்ளதை இது உணர்த்துகிறது. சமூக நலத்துறை வழியாக, சாமானிய குடும்பத்தின் பெண்களுக்கு செல்லவேண்டிய நலத் திட்டங்கள் முறையாக சென்று சேரவில்லை என்பதே, இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார். திருவண்ணாமலையில் இது போன்று முறைகேடாக நடைபெறும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, உடனடியாக அதை தடுக்க வேண்டிய பணியில் ஈடுபட உள்ளதாக மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

-ஜெ. செந்தாமரைக் கண்ணன்

Leave a Reply

You must be logged in to post a comment.