திருச்சி:
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக திட்டத்திற்கு அனுமதி கொடுக்க முடிவெடுத்தால் தமிழகத்தில் முறைப்படிகருத்து கேட்டிருக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டி 64 டிஎம்சி தண்ணீரை தேக்கினால் தமிழகம் பாலைவனமாக மாறும்.

இதனை மத்திய அரசிற்கு உணர்த்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி யிருக்க வேண்டும். இதனால் தான் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினோம். தமிழகத்தில் தண்ணீரே இல்லை. புல்லே வளர முடியாத நிலை  உள்ளது. ஏற்கனவே நாம் காட்டிய எதிர்ப்பினால் தமிழகம் வந்த மோடி சாலை மார்க்கமாக செல்வதை தவிர்த்து பறந்து சென்றார்.

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்க நினைத்தால் தமிழ்நாட்டில் மோடி நுழைய முடியாத நிலையை ஏற்படுத்துவோம். இந்த போராட்டம் நடத்த திருச்சியை தேர்ந்தெடுத்தது அரசியலுக்காக அல்ல. தேர்தலை எதிர்நோக்கியும் அல்ல. விவசாயிகளின் கண்ணீரை துடைப்பதற்காக தான் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:
தமிழக எடப்பாடி அரசு டெல்டா மாவட்டங்களில் புயல் சேத கணக்கெடுப்பை முறைப்படி நடத்தவில்லை. நிவாரணமும் கொடுக்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோ.ஆப்டெக்சில் தேவையான அளவு போர்வைகள் இருந்தும் தனியார் நிறுவனத்தில் கொள்முதல் செய்து எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என யோசிக்கின்றனர்.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு எந்த அடிப்படையில் அனுமதி கொடுத்தது. இந்த பிரச்சனையை தீர்க்க போராட்டம் மட்டும் போதாது. மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் பேசியதாவது:
கர்நாடகாவில் வெற்றிபெற வேண்டும் என்று மோடி அரசு அணை கட்ட அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் பாஜகவிற்கு ஒரு சீட் கூட கிடைக்காது.தமிழகத்தில் பலவீனமான எடப்பாடி ஆட்சி உள்ளது. திராணி இருந்தால் எடப்பாடி பழனிசாமி, அணை கட்ட அளித்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றால் தான் பாஜகாவிற்கு ஆதரவு அளிப்போம் என கூறட்டும் பார்க்கலாம். தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் பாஜக ஆட்சி நடத்துகிறது என்றார்.

 

மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ பேசியதாவது:
மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்த அறிவிப்பு வந்த உடனேயே திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா,ஆந்திரா போன்றவைகள் அணையை கட்டுமானால் தமிழகம் வாழ முடியாமல் போகுமானால் இந்தியாவின் ஒருமைப்பாடு உடைந்து போகும் சூழல் ஏற்படும். தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட மோடியை தமிழகத்திற்குள் வரவிடமாட்டோம் என்றார்.

 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேசியதாவது:  
இந்தியாவில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை போல ஒரு மாநிலம் தானே. இரண்டு மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சனையை காவிரி பிரச்சனையாக கொண்டு அதனை தீர்ப்பதற்கு சுப்ரீம் கோர்ட் மூலமாக உருவாக்கப்பட்ட காவிரி நதிநீர் ஆணையம் என்று வைத்திருக்கிறார்கள். அதன்படி காவிரி பிரச்சனையில் 15 ஆண்டுகளுக்கு எந்த ஒரு மாற்றத்தையும் எந்த ஒரு மாநில அரசும், மத்திய அரசும் மேற்கொள்ளக் கூடாது. இந்த தீர்ப்பில் குறுக்கிடக் கூடாது என கூறியுள்ளனர்.ஆனால் இப்போது மேகதாது என்ற இடத்தில் காவிரியை தடுத்து அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு ஏற்கனவே பல அணைகளை கட்டி உள்ள நிலையில் இதையும் அதனுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறது. அந்த முயற்சிக்கு அங்கீகாரம் வழங்கக்கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். நியாயமான நேர்மையான எல்லா மாநிலத்திற்கும் பொதுவாக இருக்க வேண்டிய மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அணுகும்படி கர்நாடக அரசை வலியுறுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் மத்திய அரசு தமிழ்நாட்டின் உரிமையை காலில் போட்டு மிதித்து கர்நாடகாவிற்கு ஆதரவாக அனுமதி வழங்கி உள்ளது. இதனால் காவிரி தண்ணீர் வராமல் தமிழ்நாடே பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது என்றார்.

மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது பேசுகையில்:
மேகதாதுவில் அணையை கட்டுவதன் மூலம் ஒரு மிகப்பெரிய ஆபத்தை தஞ்சை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஏற்படுத்தக் கூடிய ஒரு நிலை உள்ளது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுப்பிய வரைவு திட்டத்தை மத்திய அரசு தனது அதிகார வரம்பை மீறி காவிரி மேலாண்மை வாரியத்தின் கீழ் உள்ள அணைகட்டும் உரிமையை பறித்து அந்த உரிமையை தனது கையில் எடுத்துக் கொண்டு அனுமதி அளித்திருப்பதன் மூலம் மோடி அரசு தமிழக மக்கள் மீது காழ்ப்புணர்ச்சியில் உள்ளது என்பதை எடுத்து காட்டியிருக்கிறது. டெல்டா மாவட்ட விவசாயிகளை கூண்டோடு அங்கிருந்து வெளியேற்ற நடைபெறும் சதியின் முதல் கட்டம் தான் அணைகட்டுவதற்கான அனுமதி என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி  நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:
காவிரி பிரச்சனையை தீர்க்க காவிரி மேலாண்மை வாரியத்திற்கே அதிகாரம் உள்ளது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இதில் மத்திய அரசு, கர்நாடக அரசு எந்த முடிவும் எடுக்க  முடியாது. மரபுகள், வரம்புகளை மீறி சட்ட விரோதமாக
கர்நாடக அரசும், மத்திய அரசும் செயல்படுகிறது. மோடி அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்கிறது என்றார்.

 

 

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்கள் ரத்த கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிவாரணம் யானைப் பசிக்கு சோளப்பொரியாக உள்ளது. பிரதமர் மோடியே நீங்கள் இந்தியாவின் பிரதமரா? இல்லை கர்நாடகத்தின் முதல்வரா? மத்திய அரசின் செயல்பாடுகளால் தமிழகத்தில் நீட்டிற்கு போராட்டம், ஜிஎஸ்டிக்கு போராட்டம் என்றார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.