மதுரை:
வனங்களில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க , தமிழக மின்வாரிய தலைவரும், தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலரும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக மின்வாரிய தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதியில் சிறுத்தை, மான், யானை, காட்டெருமை என 60-க்கும் மேற்பட்ட விலங்குகளும், தோதகத்தி, தேக்கு, சந்தனமரம் போன்ற அரியவகை மரங்களும் உள்ளன.

இந்நிலையில் நவம்பர் 26 அன்று கம்பம் கிழக்கு வனச்சரகம், வெண்ணியாறு கிழக்கு மற்றும் மேற்கு பிரிவின் இணைப்பு பகுதியில் 2 பெண் யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகின. பல யானைகள் வனப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளில் சிக்கி இறந்துள்ளன.
இந்த செய்திகளின் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் (நீதித்துறை) சார்பில் தாமாக முன்வந்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

வெண்ணியாறு வனப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பி களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்கு மின்சாரத்துறை அதிகாரிகள் உதவ வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது மேகமலை வன காப்பாளர் நேரில் ஆஜராகி, ஜூன் மாதம் 2 யானைகளும், செப்டம்பரில் 1 யானையும், நவம்பரில் 2 யானைகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் மின் கம்பிகளை உயர்த்தக் கோரி மின்வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், ஜூன் மாதமே யானை உயிரிழந்த நிலையில், அதனைத் தடுக்க கடிதம் எழுதுவது மட்டும் போதுமா? எனக் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, தமிழகத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக மின்வாரிய தலைவர் அறிக்கை தாக்கல் செய்யவும் மேகமலை பகுதியில் யானைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பரிந்துரைகள் குறித்தும் மேகமலை வன காப்பாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் மதுரை மின்வாரிய செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் டிசம்பர் 13 அன்று மின் கம்பிகளை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: