===என்.ராஜேந்திரன்===
பிடிஎப் வகைக் கோப்புகளை கணினிகளிலும், கைபேசிகளிலும் எல்லோரும் பயன்படுத்துகின்றனர். பிடிஎப் என்றால் அடோப் பிடிஎப் ரீடர்தான் என்ற நிலை மாறி இன்று எண்ணற்ற பிடிஎப் ரீடர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. பெரும்பாலான ரீடர்கள் சில வசதிகளை இலவசமாகக் கொடுத்துவிட்டு திருத்தங்களைக் குறிப்பிடுதல், கோப்பு வடிவங்களை மாற்றுதல் போன்ற மேம்பட்ட வசதிகளை கட்டண முறையில் வழங்குகின்றன. பயன்பாட்டிலும், வசதிகளிலும் சிறந்த பிடிஎப் ரீடர்கள் சிலவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.

சுமத்ரா பிடிஎப்
எளிமையான ரீடரை விரும்புவோர் இதனைப் பயன்படுத்தலாம். 5 எம்பி அளவு கொண்ட மிகச்சிறிய மென்பொருள், ஓப்பன் சோர்ஸ் முறையில் உருவாக்கப்பட்டது. போர்ட்டபிள் வடிவிலும் கிடைப்பதால் கணினியிலும், பென்டிரைவ், மெமரிகார்டு போன்றவற்றில் இன்ஸ்டால் செய்யாமல் எளிதாக பதிவு செய்து பயன்படுத்தலாம்.சுமத்ரா ரீடர் மூலமாக மின்னூல் வடிவங்களான ePub மற்றும் Mobi கோப்பு வடிவங்களையும், காமிக் புத்தக வடிங்களான CBZ, CBR வடிவங்களையும் திறக்கக்கூடியது.சுமத்ரா பிடிஎப் பதிவிறக்கம் செய்ய : https://www.sumatrapdfreader.org

STDU வியூவர்
இலவசமாகக் கிடைக்கக்கூடிய மற்றொரு பிடிஎப் ரீடர் இது. 3 எம்.பி.க்கும் குறைவான அளவு கொண்டது. சுமத்ரா பிடிஎப் ரீடர் போலவே PDF, Mobi, Epub, CBZ, CBR போன்ற கோப்பு வடிவங்களுடன் டெக்ஸ்ட் (TXT) வடிவ கோப்புகள், BMP, PCX, JPEG, GIF, PNG, WMF, EMF, PSD போன்ற படக் கோப்புகள், FB2, TCR, PalmDoc(PDB), AZW, DCX, DjVu உள்ளிட்ட பல கோப்பு வடிவங்களை திறக்கக்கூடியது.சிறிய அளவில் கோப்பு மாற்றி வசதியையும் தருகிறது. PDF கோப்புகளை BMP, GIF, PNG போன்ற படக் கோப்புகளாக மாற்றும் வசதி உள்ளது.

STDU வியூவர் பதிவிறக்கம் செய்ய: http://www.stdutility.com/stduviewer.html

யாக் ரீடர்
காமிக் புத்தகங்களை படிக்கச் சிறந்த ரீடர். பிடிஎப் மற்றும் பல்வேறு விதமான படக் கோப்புகளையும் திறக்க முடியும். படங்களை திருப்புதல், இரண்டு பக்கங்களை ஒருங்கே பார்க்கும் வசதி, பின்னணி நிறத்தை மாற்றிக் கொள்ளும் வசதி, மின்னூலை பாதியில் மூடித் திறந்தால் கடைசியாகப் படித்த இடத்திலிருந்து காட்டும்படியான Resume வசதி, படிப்பவர்களின் கண்களுக்கு இதமான வெளிச்சம் தரும் வசதி எனப் பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளது.நூலகம் போல மின்னூல்களை சேகரித்து அடுக்கி வைத்து பார்க்கும் வசதி இதன் சிறப்பம்சமாகும்.யாக் ரீடரைப் பதிவிறக்கம் செய்ய: http://www.yacreader.com

காய்ஹோ ரீடர்
இதுவும் இலவச ரீடர்தான். 49 எம்.பி. அளவுள்ளது. மாற்று ரீடர் பயன்படுத்த விரும்புவோர் இதனையும் பயன்படுத்தி பார்க்கலாம். கோப்பை மாற்றுதல், எடிட் செய்தல், திருத்தம் பதிவு செய்தல் உள்ளிட்ட வசதிகளில் சில மட்டுமே இலவசமாக் கிடைக்கிறது.முழுமையான வசதிகள் வேண்டுமென்றால் கட்டண மென்பொருளுக்கு மாறவேண்டும். பிடிஎப் ரீடராக மட்டுமல்லாது பக்கங்களை மாற்றுதல், பிடிஎப் கோப்பில் உள்ள படங்களை பிரித்தெடுத்தல், குறிப்புகளை எழுதுதல் போன்ற சில வசதிகள் இலவசம் என்பதால் தேவையுள்ளவர்கள் இதனை பதிவிறக்கலாம்.

காய்ஹோ ரீடரைப் பதிவிறக்க: https://store.gaaiho.com/download/reader.aspx

Leave a Reply

You must be logged in to post a comment.