தருமபுரி : பாலவாடி உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாலவாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த பத்தாண்டுகளில் எட்டு ஆண்டுகள் நூறு சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளது. மேலும். இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில் பல்வேறு சிறப்பிடங்களைப் பெற்றும் தேர்ச்சியடைந்துள்ளனர். இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 11 ஆண்டுகளான நிலையில் போதிய வகுப்பறைக் கட்டிடங்கள், கழிவறைகள் மற்றும் ஆய்வக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பள்ளிக்கு பொதுமக்கள் அளித்த நான்கரை ஏக்கர் பரப்பளவிலான நிலமும் உள்ளது. இதில் நிழல் தரும் மரங்கள் மற்றும் அலங்கார செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன.

அதேநேரம், இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் வெளிநபர்கள் அசுத்தம் செய்வது, சமூக விரோதிகள் உள்ளிட்ட வெளியாட்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும், வகுப்பறைகளுக்கு அருகில் கால்நடைகள் நடமாடுவதால் பள்ளிக்கு முன்பு வளர்க்கும் பூச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் சேதமடைகிறது. இதுமட்டுமின்றிஅருகிலுள்ள விவசாய நிலங்களையொட்டி மண்டிக்கிடக்கும் புதர்களிலிருந்து பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அடிக்கடி வகுப்பறைக்குள் நுழைவதால் மாணவர்கள் அபாயகரமான சூழலில் கல்வி பயிலும் நிலை காணப்படுகிறது. மேலும், பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் பள்ளியில் உள்ள நிலம் சமன்படுத்தப்படாமல் மேடு, பள்ளமாக இருக்கிறது. ஆகவே, பள்ளிவளாகத்தை சமன்படுத்தி மாணவர்கள் விளையாட ஏதுவாக விளையாட்டு மைதானம் அமைத்து தரவேண்டும். இதேபோல், பள்ளி வளாகத்தைத் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிப்பதற்கு பள்ளிக்கு சுற்றுச்சுவர் மிகவும் அவசியம் என்று பாலவாடி கிராம மக்கள்மற்றும் பெற்றோர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: