மன்னார்குடி, டிச. 4-

திருவாரூர் மாவட்டத்தின் மேற்கு தென் மேற்கு பகுதி கிராமங்களில்  மன்னார்குடி வருவாய் வட்டத்திற்குட்பட்ட   வல்லூர் தென்பறை திருமக்கோட்டை பைங்காநாடு மற்றும் அதை ஒட்டிய  கிராமங்கள் பாலையக்கோட்டை சமுதாயம், மாங்கொட்டை காலனி, நத்தம், புதுக்குடி பரசபுரம் ராதாநரசிம்மபுரம் ராஜகோபாலபுரம் மற்றும் அதன் உள்கிராமங்கள் காஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கிராமங்களாகும். இப்பகுதியின் பணப்பயிர்கள் தென்னை வாழை புயலால் படுமோசமாக நாசமாகியுள்ளது. குறிப்பாக கிராமங்கள் தோறும் தென்னை மரங்கள் அடியோடு வீழ்ந்து கிடக்கும் காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. கிராமங்களின்  பொருளாதாரம் வாழ்வாதாரம் நிலைகுலைந்துள்ளது. கடந்த காலத்தில் குறிப்பாக 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் காவிரி நீர் போதாமை மற்றும் ஏறிவரும் உரம் பூச்சிமருந்து விலைகளால் நெல் சாகுபடி மீது நம்பிக்கையிழந்த இப்பகுதியின் விவசாயிகள் குறிப்பாக மூன்று நான்கு ஏக்கர் நிலமுள்ள நடுத்தரவிவசாயிகள்  தென்னை விவசாயத்திற்கு மாறினர். கடன் வாங்கி பட்டுக்கோட்டை வேளாண் பல்கலைகழக ஆராய்ச்சி நிலையத்திலிருந்து நெட்டை ’குட்டை ரக தென்னங் கன்றுகளை வாங்கி நட்டனர். கடன் வாங்குவதற்கு அலைந்தது ஒரு புறம் போர் போட மின் இணைப்பு வாங்க ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் செலவழித்து அரும்பாடு பட்டு கன்றுகளை வளர்த்தனர். ஐந்தாண்டுகளுக்கு பிறகு தென்னை வெட்டு மூலம் கிடைக்கத் துவங்கியது. ஆண்டிற்கு சராசரியாக ஆறு வெட்டு தென்னையில் வரும். ஒரு ஏக்கருக்கு சராசரி 75 மரங்கள்  என்று வைத்துக்கொண்டால் ஐந்து ஏக்கர் நடுத்தர விவசாயிக்கு சராசரி கவனிப்பிற்கு ஒருஆண்டிற்கு 90 ஆயிரம் காய்கள் ரூ.9 லட்சம் கிடைத்தது.  சராசரி ஒரு மரத்திற்கு 50, 55 தேங்காய்கள் என்றால் ஆண்டு வருமானம் இன்னும் கூடுதலாக கிடைக்கும். பலனால் கடன் அடைத்து குடும்பம் கொஞ்சம் கொஞ்கமாக நிமிரத் துவங்கியது. இந்த இடைப்பட்ட காலத்தில் குடும்ப திருமணங்கள் மற்ற தேவைகள், மருத்துவம், குழந்தைகள் கல்வி செலவுகளோடு இயற்கை சீற்றங்கள், விலை வாசி உயர்வு, மத்திய மாநில அரசுகளின் துரோகங்களால் அந்த விவசாயிகளின் குடும்பங்கள் அடைந்த துயரங்கள் அளவிட முடியாதவை.  இப்போது அந்த வாழ்வாதாரமே தகர்ந்து போயுள்ளது. பல குடும்பத்து பெண்கள் இந்த இழப்பால் விழுந்த மரங்களுக்கு இடையில் நின்று கொண்டு அழுது அரற்றியதை கண்கூடாக பார்த்தோம்.

இதைவிடபெரிய சோகம் வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்துவதுதான். வெட்டி அப்புறப்படுத்தவே ஒரு மரத்திற்கு ரூ.1000 ஆகும் என்ற நிலையில்  அப்படுத்திய மரங்களை எந்த இடத்தில் போடுவது  என்ற குழப்பமும் தென்னை விவசாயிகள் குடும்பத்தை அதிர்ச்சியில் தள்ளி உள்ளது. ஒரு மரத்திற்கு ரூ.1100 நிவாரணம் என்பது தென்னை விவசாயிகளின் இழப்போடு ஒப்பிட்டு பார்த்தால் எந்த வகையிலும்  பொருத்தமற்றதாகும்.  எட்டு வழிச் சாலைக்காக ஒரு  தென்னை மரத்திற்கு ரூ.50ஆயிரம் அள்ளிக் கொடுப்பதாக அறிவித்த தமிழகஅரசின் கார்ப்பரேட் புத்தி விவசாயிகளை பாதுகாக்க எங்கே போனது என்பதுதான் நமது கேள்வி. தென்னை வேர் விட்டு சாய்ந்த  அந்த நிலத்தில் வயிற்றுப்பாட்டிற்கு உடனே  நெல் பயிரிடவும் முடியாது. கையறு நிலையில் திகைத்து நிற்கிறது டெல்டா மாவட்ட கிராமங்கள். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இழப்பை குறைப்பதற்கான கணக்கெடுப்பு புள்ளிவிபர கணக்கீட்டு வேலைகளிலும் அரசு நிர்வாகம் இறங்கியிருக்கிறது. இழப்பின் வேதனையிலும் அரசின் மீது கோபத்தின் உச்சத்திலும் டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமல்ல தமிழக  விவசாயிகள் உள்ளனர்.  நிவாரணத்தை அதிகப்படுத்த வேண்டும். தீ்க்கதிர் செய்தியாளர் கோட்டூர் ஒன்றியக்குழு உறுப்பினர் ஸ்டாலின் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இந்த கிராமங்களுக்கு சென்றபோது தென்னை விவசாயிகள் நேரிடையாக இதனை தெரிவித்தனர். டெல்டா மாவட்ட விவசாயிகள் அனைவருக்கும்  கூட்டுறவு வங்கிகள், நாட்டுடமை வங்கிகள் மூலமாக நீண்ட கால நிதி உதவி பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டத்தின் தென்னை விவசாயிகளை அரசுதான் பாதுகாக்க வேண்டும். மாநில அரசு மனமிரங்குமா?

Leave a Reply

You must be logged in to post a comment.