புதுதில்லி, டிச. 4-

குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை அமல்படுத்துவது சம்பந்தமாக உச்சநீதிமன்றம் 2018 அக்டோபர் 31 அன்று அறிவிக்கை வெளியிட்டிருந்ததையும், அதன்மீது தில்லி அரசாங்கம் அறிவிக்கை வெளியிட்டிருப்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக சிஐடியு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: தில்லி அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையின்படி, ஊதியங்கள் தொழிலாளர்களுக்கு காசோலை மூலமாகவோ அல்லது வங்கிக்கு  அவர்களுடைய கணக்கில் மாற்றல் செய்வதன் மூலமாகவோதான் மேற்கொள்ளப்பட வேண்டும். இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை. மேலும் தில்லியில் வேலையில் உள்ள தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று போராடி வந்த தொழிற்சங்க இயக்கத்திற்கு இது ஒரு வெற்றி என்பதிலும் எவ்விதச் சந்தேகமுமில்லை.

குறைந்தபட்ச ஊதியத்திற்காகவும், தொழிலாளர் நலச் சட்டங்களைப் பாதுகாத்திடவும் போராடிவந்த தொழிலாளர்களுக்கு இது ஒரு மாபெரும் வெற்றியாகும்.  2017 மே மாதத்தில் அதரசாங்கம் குறைந்தபட்ச ஊதியத்தில் 37 சதவீதம் அதிகரித்து அறிவித்திருந்தது. எனினும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடைகள் பெற்றன. ஆனால்,  உச்சநீதிமன்றம் அந்தத் தடைகளை எல்லாம் இப்போது நீக்கி, 37 சதவீத  ஊதிய உயர்வை நிலைநாட்டி, தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதன் அடிப்படையில் தில்லி அரசாங்கம் இப்போது அறிவிக்கையைக் கொண்டுவந்திருக்கிறது.

எனவே, இவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தைத் தொழிலாளர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகளை தில்லி அரசாங்கமும், சம்பந்தப்பட்ட ஏஜன்சிகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தபட்ச ஊதியத்தை மேலிருந்து கீழ்வரை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எவ்வித இடையூறுமின்றி வழங்கிட வேண்டும் என்று சிஐடியு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு சிஐடியுவின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.