திருச்சிராப்பள்ளி:
கர்நாடகாவில் சில ஓட்டுக்களாவது கிடைக்காதா என்று தமிழகத்தை வஞ்சிக்கிறார் பிரதமர் மோடி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்யக்கோரி அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் செவ்வாயன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி பொதுசெயலாளர் அப்துல்சமது, திமுக திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் பேசினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டதால் அந்த மக்கள் புயல் பாதிப்பால் தவித்துக் கொண்டிருக்கும் நிலை உள்ளது. உலகத்திற்கு எல்லாம் உணவு அளித்த விவசாய மக்கள் இன்றைக்கு ஒரு வேளை உணவிற்கு கையேந்தி நிற்கும் அவல நிலையில் தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

எங்களுக்கு உயிரே போகும் நிலைமை வந்தாலும் தமிழனாக பிறந்திருக்கும் நாங்கள் எங்கள் உரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதற்கு அறிகுறியாக தான் இந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் இங்கு நடைபெற்று வருகிறது.

இந்த இக்கட்டான நிலையில் ஒரு பக்கம் காவிரி பாசன டெல்டா பகுதிகள் கஜா புயலால் கசங்கி போய் கிடக்கும் நிலையில் நேரம் பார்த்து கர்நாடக அரசாங்கம் மேகதாதுவில் அணையை கட்டுவதற்கு அனுமதி கோரியது. மோடி அரசாங்கமும் மறைமுகமாக மத்திய நீர்வள குழுமத்தின் மூலம் அனுமதி வழங்கியது. அதன் மூலம் அடிக்கல்லை நாட்டிவிடலாம், அணையை கட்டிவிடலாம் என்று கர்நாடக அரசு நினைக்கிறது.

மத்தியில் இருக்கிற நயவஞ்சக மோடி அரசு எப்படி இருந்தாலும் தமிழகத்தில் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. எனவேதான் கர்நாடகத்திலாவது கொஞ்சம் ஓட்டுகளை பெறலாம் என அனுமதியை கொடுத்து இருக்கிறார்கள். கர்நாடக அரசும், மோடி அரசும் நமது உரிமைகளில் கைவைக்கின்ற போது நாம் அமைதியாக இருந்து விடக்கூடாது என்கிற அடிப்படையில் தான் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டம் மேகதாது அணை கட்டுவதற்கெதிரான எச்சரிக்கை மணி மட்டுமல்ல அந்த முயற்சிக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கின்ற மோடி அரசாங்கத்திற்கும். யார் எக்கேடு கெட்டால் என்ன கல்லா கட்டும் வேலையை மட்டும் கவனமாக பார்க்கும் எடப்பாடி அரசிற்கும் ஆன எச்சரிக்கை மணியாகும்.

இதே நிலை தொடர்ந்தால் மோடி அரசிற்கும் எடப்பாடி ஆட்சிக்கும் சாவு மணி அடிக்கும் ஆர்ப்பாட்டமாக இது மாறும். எத்தனை ஆண்டுகாலம் காவிரி உரிமைக்காக போராடி கொண்டிருப்பது. ஒரு தலைமுறையே சென்று விட்டது. ஒரு தலைமுறை முழுவதும் வழக்கு நடத்தி வழக்கு நடத்தி நடுவர் மன்ற தீர்ப்பும், உச்சநீதிமன்றம் 10 ஆண்டுகளாக விசாரணை நடத்தி கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பும் வழங்கி காவிரி மேலாண்மை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கி விட்டார்கள்.

இனிமேல் எந்த நடவடிக்கை என்றாலும் இந்த ஆணையம் தான் பொறுப்பு. நீரை தேக்குவதானாலும் சரி, நீரை திறப்பதானாலும் சரி, அணைகட்டுவதானாலும் சரி அனைத்திற்கும் இந்த ஆணையம் தான் பொறுப்பு என்று சொல்லிய பிறகும் அந்த ஆணையத்தை மீறி நீங்கள் எதற்காக மூக்கை நுழைக்கிறீர்கள்?
மோடி ஒரு நோக்கத்தோடு செயல்படுகிறார். தமிழகத்தை வாழவிடக் கூடாது என்பது மட்டுமல்ல, கடைசி நேரத்தில் கர்நாடகத்தில் சில ஓட்டுகள் கிடைக்காதா என்று தமிழகத்தை வஞ்சிக்கக் கூடிய காரியத்தில் மோடி ஈடுபடுகிறார்.

மேகதாது அணை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு அக்கறை இருக்கின்றது. ஆட்சியில் இருக்கும் எடப்பாடி அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டாமா? இன்றைக்கும் ஏன் வாயை மூடிக்கொண்டிருக்கிறீர்கள். மோடியின் கோபத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்றுதானே? காவிரி போனாலும் பரவாயில்லை, மேகதாதுவில் அணை கட்டினாலும் பரவாயில்லை.தமிழகமே அழிந்தாலும் பரவாயில்லை என்ற மோசமான நிலையை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதால் தான் இந்த அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எனவே மத்திய அரசு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் இங்கு திரண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் உங்களை நோக்கி அணி திரள வேண்டிய நிலை ஏற்படும். சிலர் மோடி நல்லது செய்து கொண்டிருக்கிறார் என கூறுகிறார்கள்.

எது நல்லது? கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்காதது நல்லதா? நீட் தேர்வை கொண்டு வந்தது நல்லதா? எனவே நாம் விழிப்போடு இருந்து எதிர்காலத்தில் மோடிக்கும், எடப்பாடிக்கும் முடிவுகட்டும் மகத்தான களத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.