சேலம் : தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கக்கோரி அரசு மருத்துவர்கள் செவ்வாயன்று புறநோயாளிகள் பிரிவு சிகிச்சைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்களுக்கு, மற்ற மாநிலத்தில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் எனக்கோரி அரசு மருத்துவர்கள் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மருத்துவர்களின் கோரிக்கை குறித்து அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் செவ்வாயன்று புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அரசு மருத்துவமனையானது சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்ட மக்கள் பெருமளவு வந்துசெல்லும் முக்கிய மருத்துவமனையாக உள்ள நிலையில், மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

அதேநேரம், மருத்துவர்களின் இந்த போராட்டத்தை தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களை கொண்டு சில இடங்களில் மட்டும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் முக்கிய மருத்துவர்கள் வாராததால், மருத்துவ பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பேராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறுகையில், எங்களது கோரிக்கை குறித்து பல முறை அரசிடம் எடுத்துரைத்தும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே வேறு வழியின்றி இந்த போராட்டத்தை முன்னெடுத்து உள்ளோம். தங்களது கோரிக்கை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடரும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி
இதேபோல், தருமபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் ஒருநாள் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது. ஊதிய உயர்வு கோரிக்கையை அரசிடம் முறையிட்ட போது நிறைவேற்றுவதாக உறுதியளித்த அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, அரசுக்கு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தெரியப்படுத்தும் வகையில் தற்போது புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை புறக்கணித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், டிச.10 ஆம் தேதியன்று மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் அழைத்து பேச வலியுறுத்தி தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது. டிச.12 ஆம் தேதியன்று புறநோயாளிகள் சிகிச்சைகளை முழுமையாக நிறுத்துவது. டிசம்பர் 13 ஆம் தேதியன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது. டிச. 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மூன்று நாள் தொடர்அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

கோவை
கோவை மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில செயலாளர் ரவிசங்கர், கோவை மாவட்டச் செயலாளர் ஜெய்சிங் ஆகியோர் தலைமையில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரவிசங்கர் கூறியதாவது, தமிழகம் முழுவதும் 18,688 அரசு மருத்துவர்கள் உள்ளனர். இதில் மாநிலம் முழுவதும் அரசு மருத்துமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 10 ஆயிரம் மருத்துவர்கள் செவ்வாயன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமால் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.