தருமபுரி : சிஐடியு சங்கம் அமைத்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி சரவணா ஸ்பின்னிங் மில் முன்பு 8 ஆவதுநாளாக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி அருகே உள்ள தடங்கத்தில் சரவணா என்ற தனியார் ஸ்பின்னிங் மில் இயங்கி வருகிறது. இம்மில்லில் 250 பெண்கள் உள்பட 400க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மில் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த கூலியேவழங்கி வந்தது. மேலும், தொழிலாளர்களுக்கான சட்ட சலுகைகளை அமல்படுத்த மறுத்து வந்ததுடன், அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனையடுத்து அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் சிஐடியு தருமபுரி டிஸ்ட்ரிக் டெக்ஸ்டைல்ஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைமையில் தொழிற்சங்கம் அமைத்தனர். இதன்பின் தங்களது கோரிக்கைகளை விளக்கி கடந்த நவ.27 ஆம் தேதியன்று ஆலையின் முன்பு வாயிற்கூட்டம் நடத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆலை நிர்வாகம் சிஐடியு தொழிற்சங்கம் அமைத்ததற்காகவும், வாயிற்கூட்டம் நடத்தியதற்காகவும் வாயிற்கூட்டம் நடந்த அன்றையதினமே அனைத்து தொழிலாளர்களையும் ஆலையைவிட்டு வெளியேற்றியது. இதன்பின் நவ.28 ஆம் தேதியன்று தொழிலாளர்களுக்கு வேலை வழங்கவில்லை. மேலும், ஸ்பின்னிங் மில்ஆலையின் சிஐடியு சங்க தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் பழனி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தது. இதனையடுத்து தொழிலாளர் நலத்துறையிடம் சிஐடியு சார்பில் முறையிடப்பட்டது.இதில் கிருஷ்ணகிரி தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையரான திருநந்தன், பணியிடை நீக்கம் செய்த 3 தொழிலாளர்களையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என ஆலை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், ஆலை நிர்வாகம் 3தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கவில்லை.

இதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி சரவணாஸ்பின்னிங் ஆலை முன்பு தொழிலாளர்கள் கடந்த 8 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாவட்டச்செயலாளர் ஏ.குமார், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் பி.இளம்பரிதி,சோ.அருச்சுணன், வே.விசுவநாதன்,சிஐடியு மாவட்டசெயலாளர் சி.நாகராசன் ஆகியோர் காத்திருப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினர். இப்போராட்டத்தில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: