ஏற்காடு : ஏற்காட்டில் பழங்காலத்தை சேர்ந்த புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்காட்டை சேர்ந்த வரலாற்று ஆர்வலரும், ஆய்வாளருமான ஜமுனாராணி கூறியதாவது: “சேலம் மாவட்டம், ஏற்காட்டிலுள்ள நாகலூர் கிராமத்தில் உள்ள திரிபுர சுந்தர கோவிலை ஒட்டியுள்ள காப்பி தோட்டத்தின் வேலி பகுதியில் இந்த நடுகல் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டடி அகலமும் மூன்றடி உயரமும் உள்ள இந்த நடுகல்லில் வீரன் கையில் குத்தீட்டியும், பக்கவாட்டில் பாயும் நிலையிலுள்ள புலியின் கழுத்துக்கு சற்று கீழ் நெஞ்சில் ஈட்டி பாய்ந்து உடலில் ஊடுருவி முதுகிற்கு வெளியே பாய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. வீரன் தலைமுடி அள்ளி முடிந்து கொண்டை இடப்புறம் சரிந்து, முறுக்கிவிடப்பட்ட மீசையுடன் விழித்து பார்க்கும் தோற்றத்துடன் வீரன் முகம் அமைந்துள்ளது.

கழுத்தில் அணிகலன் அணிந்துள்ள நிலையிலும், இடையில் வரிந்து கட்டப்பட்ட ஆடையுடன் முன்புறம் குஞ்சம் தொங்கும்படி அமைந்துள்ளது. சேர்வராயன் மலைப்பகுதியில் கிடைத்துள்ள புலிக்குத்தி நடுகற்கல்லின் உருவ அமைப்பை ஒப்பிட்டு பார்க்கும் போது, வடிவ அமைப்பு, உடல் அமைப்பு, உணர்ச்சி வெளிபாடு மாறுபட்டுஅமைந்துள்ளதால் இக்கல் பழமையான கல்லாக இருக்கலாம். நாகலூர் என்று அழைக்கப்படும் இந்த ஊரின் பெயர் பழங்காலத்தில் நடகலூர் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவிநாகலூர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இன்றளவிலும், பொங்கல் பண்டிகையின்போது கிராம மக்கள் இந்த கல்லினை சுத்தம் செய்து வழிபாடு நடத்துகின்றனர்”. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.