திண்டுக்கல்,
நிலக்கோட்டை அருகே ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய அதிமுக திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் உதயகுமாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் உதயகுமார் ஞாயிறன்று நிலக்கோட்டையிலிருந்து அழகம்பட்டி வழியாக செல்லும் போது ஜங்கால்பட்டியில் உள்ள ரயில்வே கேட் ரயில் வருவதை முன்னிட்டு மூடப்பட்டு இருந்தது. அங்கு வந்த உதயகுமார் ரயில் ஊழியர் கேட்கீப்பர் மணிமாறனை கேட்டை திறக்க கூறியுள்ளார். கேட் மூடப்பட்டுவிட்டால் ஆட்டோமேட்டிக் சிஸ்டத்தினால் ரயில் சென்றவுடன் சிக்னல் கிடைத்தால் தான் கேட் திறக்க முடியும். இந்த சிஸ்டம் கூட தெரியாமல் ஒரு மக்களவை உறுப்பினர் சாதாரண கேட்கீப்பரிடம் தகராறு இழுத்ததோடு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் உதயகுமாருடன் காரில் வந்த இரண்டுபேரும் மணிமாறனை தாக்கியுள்ளனர். மேலும் ஜல்லிபட்டியைச் சேர்ந்த உதயகுமாரின் ஊர் காரர்கள் வந்து மணிமாறனுக்கு கொலைமிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்;. மேலும் கேட்கீப்பர் தன்னை தாக்கியதாக அம்மையநாயக்கனூர் காவல்நிலையத்;தில் பொய்யான புகார் கொடுத்துவிட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுவிட்டு பிறகு திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிகிச்சை
பெற்று மதுரைக்கு பரிந்துரைத்து மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது போல் ரிக்கார்டுகளை தயார் செய்வதும்,  நாடகமாடுவதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உதயகுமாரின் நடவடிக்கையைக் கண்டித்து கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் இந்த தொகுதி பிரச்சனைகள் குறித்தோ, திண்டுக்கல் மாவட்ட மக்கள் பிரச்சனைகள் குறித்தோ எந்த இடத்திலும் வாய்திறக்காத
நாடாளுமன்ற உறுப்பினர் தான் ஒரு எம்.பி. என்ற கோதாவில் தன்னை பார்த்தவுடன் கேட்டை திறக்க வேண்டும் என்ற உணர்வோடு இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். ஊழியர் மீது தவறு செய்து இருந்தால் அவர் மீது ரயில்வே நிர்வாகத்தில் மேல் அதிகாரிகளிடம் ஒரு மக்களவை உறுப்பினர் என்ற முறையில் புகார் அளிக்க வாய்ப்பிருந்தும் நேரடியாக எம்.பியே களத்தில் இறங்கி கடைநிலை ஊழியரை தாக்கியது சரியல்ல.
ஒரு பொறுப்புள்ள மக்களவை உறுப்பினர் ரயில்வே ஊழியரை பணி செய்யவிடாமல்
தடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரை தாக்கிவிட்டு நாடாகமாடும் போக்கு வன்மையாக கண்டனத்துக்குரியது. தமிழக
அரசும், காவல்துறையும், ரயில்வே நிர்வாகமும்; திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் உதயகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு ஆர்.சச்சிதானந்தம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உதயகுமார் எம்.பி. மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சிஐடியு
இது தொடர்பாக சிஐடியு மாவட்டச் செயலாளர் கே..ஆர்.கணேசன் கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: – நிலக்கோட்டை அருகேயுள்ள ரயில்வே கேட்டில் பணியாற்றும் கேட் கீப்பரை திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் உதயகுமார் தாக்கியுள்ளார். ரயில் வருவதையொட்டி கேட்டை அடைத்த போது உதயகுமார் எம்.பி. கேட்டை திறந்துவிட சொல்லி தகராறு செய்துள்ளார். ஒரு முறை கேட்டை அடைத்தால் மீண்டும் சிக்னல்
விழுந்தால் தான் திறக்கும் என்று ஊழியர் மணிமமாறன் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் உதயகுமார் எம்.பி. கேட்கவில்லை. நான் ஒரு எம்.பி. என்னை மதிக்கவில்லை என்று கூறி அவரும் அவருடன் வந்தவர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆளும்கட்சி எம்.பி.யின் இத்தகைய அராஜக போக்கை சிஐடியு வன்மையாக கண்டிக்கிறது. எனவே ரயில்வே நிர்வாகம் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேட்கீப்பர் மணிமாறன் ரயில்வே போலீசாரிடம் தன்னை தாக்கியதாக புகார்
கொடுத்துள்ளார். ரயில்வே நிர்வாகமும் அவர் மீது ரயில்வே காவல்த்துறையில் புகார் கொடுத்து வழக்கு பதிய வேண்டும் என்று சிஐடியு கேட்டுக்கொள்கிறது. மேலும் செவ்வாயன்று மாலை மதுரை ரயில் நிலையத்தில் டி.ஆர்.எம். அலுவலகம் முன்பாக டி.ஆர்.இ.யு உள்ளிட்ட அனைத்து ரயில்வே ஊழியர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஊழியர்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என்ற கே.ஆர்.கணேசன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேட்கீப்பர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – டி.ஆர்.இ.யு வலியுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் கேட்கீப்பர்களுக்கு உரிய பாதுகாப்புவழங்க வேண்டும் என்று டி.ஆர்.இ.யு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இச்சங்கத்தின் திண்டுக்கல் கிளைச்செயலாளர் இம்மானுவேல் ஆரோக்கியசாமி கூறும் போது
திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில்வே கேட்கீப்பர்களுக்கு எந்தவித பாதுகாப்பும், உயிருக்கு உத்தரவாதமும் இல்லை. தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இதற்கு முன்பு இதே போல் 5 சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இப்போது மக்களவை உறுப்பினர் உதயகுமாரே பொறுப்பில்லாமல் சாதாரண ஊழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். பணியில் இருக்கும் ஒரு கேட்கீப்பரை தாக்கி வேலை செய்ய விடாமல் தடுத்தால்
தாக்குதல் நடத்தியவர் மீது 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் ரத்தகாயம் ஏற்படும்படி தாக்குதல் தொடுத்தால் 10 ஆண்டு வரை தண்டனை கிடைக்கும். இந்த குறிப்புகளை ஒவ்வொரு ரயில்வே கேட் முன்பாகவும் ரயில்வே நிர்வாகம் எழுதி வைக்க வேண்டும். ஆனால் எந்த கேட்டின் முன்பாகவும் இவ்வாறு எழுதி வைக்கப்படவில்லை. இது போன்ற தாக்குதல் தொடர்பாக ரயில்வே காவல்துறை யாரையும் கைது செய்து தண்டனையும் பெற்றுத்தரவில்லை.
எனவே ரயில்வே நிர்வாகம் ஊழியர்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என்று டி.ஆர்.இ.யு சார்பாக கேட்டுக்கொள்கிறேன், மேலும் ரயில்வே கேட்டின் முக்கியத்துவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு துறை சார்பாக அருகிலுள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படும்படி துண்டு பிரசுரங்கள் அல்லது வேறு வகையான விளம்பரங்கள் மூலமாகவோ பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று இம்மானுவேல் ஆரோக்கியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

(நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.