தூத்துக்குடி:
தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு அறிக்கையை நிராகரிக்க வேண்டும். இந்தப் பிரச்சனையில் தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனத்தில் கொள்ளவேண்டும். இரட்டை வேடம் போடக் கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய தொழிற்சங்க மையம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் – ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் திங்களன்று நடைபெற்றது.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரைப் படுகொலை செய்தது. இதையடுத்து எழுந்த கொந்தளிப்பின் பின்னணியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் மேற்கண்ட அரசாணையின் சட்ட வலிமை குறித்து கேள்வியெழுப்பியபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், கொள்கை முடிவெடுத்துதான் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது; அரசாணை சட்டப்படி வலிமையானது என நீதிமன்றத்தில் தெரிவித்தார். முதல்வர் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் உச்சநீதிமன்றம் அல்ல, உலக நீதிமன்றமே சென்றாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது என்றும் கூறினர்.

ஆனால், நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு ‘‘தமிழக அரசின் அரசாணை இயற்கை நீதிக்கு எதிரானது’’ என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.
நீதிபதி தருண் அகர்வால் குழு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த வரம்புகளை மீறி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது; இக்குழுவின் அறிக்கையை பசுமை தீர்ப்பாயம் நிராகரிக்க வேண்டும்; ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர்.ரசல், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முத்து, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் இ.சுரேஷ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பே.பூமயில் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் உமாசங்கர், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஜாய்சன், சிஐடியு நிர்வாகிகள் டி.முனியசாமி. எம்.முருகன், எம்.ஞானதுரை, கே.சங்கரன், மாணவர் சங்க நிர்வாகிகள் மாரி, ஸ்ரீதர், ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் செயலாளர் தா.ராஜா, புறநகர் செயலாளர் பி.ராஜா உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் மக்களை பணம் கொடுத்து ஏமாற்ற முயற்சிக்கிறது. தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11 இடங்களில் பல லட்சக்கணக்கான டன் தாமிரக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. ஆண்டுக்கு ஆறு லட்சம் டன் தாமிரக் கழிவுகள் உற்பத்தியாகிறது. இதை எங்கே எப்படி வைக்கப்போகிறார்கள்? இது போல் 43 ஆயிரம் டன் ஆர்சானிக் கலந்த கழிவுகளை எப்படி பாதுகாப்பாக வைக்கப்போகிறது ஸ்டெர்லைட்? காப்பர் கழிவுகளால் மக்கள் மூச்சுத்திணறல், புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பனிடம் வலியுறுத்தினர்.

கலெக்டர் ‘எஸ்கேப்’
ஒவ்வொரு திங்களன்றும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவது வழக்கம். ஆனால், திங்களன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தி சிஐடியு, வாலிபர், மாணவர், மாதர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மனுக்கொடுக்க வந்திருந்தனர். இப்படி மனுக்கொடுக்க வருகிறார்கள் என்று தெரிந்தே கலெக்டர் ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார் என்றனர் மனு கொடுக்க வந்தவர்கள்.ஆட்சியர் விடுமுறையில் சென்றுவிட்டதாக ஒரு தகவலும், அவர் மதுரையில் ஒரு கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ளார்; பிற்பகலில் வந்துவிடுவார் என்று மற்றொரு தகவலும் உலா வந்தது. பகல் 12 மணி வரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவில்லை.

ஸ்டெர்லைட் ஆதரவு காவல்துறை
‘உச்சநீதிமன்றம் அல்ல; உலக நீதிமன்றமே சென்றாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட பல்வேறு அமைச்சர்கள் பேசிவருகின்றனர். இந்த நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒட்டிய போஸ்டர்களை காவல்துறை கிழித்துள்ளது. தூத்துக்குடி காவல்துறை தமிழக அரசிற்கு கட்டுப்பட்டதா அல்லது ஸ்டெர்லைட்டிற்கு கட்டுப்பட்டதா என கேள்வியெழுப்பினர் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகப் பகுதியில் பல்வேறு அமைப்பினர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிக் கொண்டேயிருந்தனர்.ஆர்ப்பாட்டம், தொடர் முழக்கங்களையடுத்து சுமார் 500 காவல்துறையினர் ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.