கோயம்புத்தூர் : விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை செஞ்சேரிமலையில் மூன்றாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டனர். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியாக திருப்பூர்மாவட்டம் புகழுர் முதல் கேரள மாநிலம் திருச்சூர் வரை விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பவர்கிரிட் நிறுவன ஊழியர்கள் அத்துமீறி நிலம் அளக்கும் பணியில் ஈடுபட்டதை கண்டித்து, கோவை மாவட்டம் செஞ்சேரிமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தில் கொங்கு ராசாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் எம்.முனுசாமி, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் வி.பெருமாள், கோவை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி வழக்கறிஞர் ஈசன், பாசன விவசாயிகள் சங்கத்தின் நல்லதம்பி மற்றும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பிரமணியம், பார்த்தசாரதி ஆகி
யோர் தலைமையேற்று வருகின்றனர். மூன்றாவது நாளாக வெள்ளியன்று தொடரும் இப்போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்து போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இதேபோல் விவசாயிகளின் நியாயமான போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அப்பகுதி பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருபவர்களுடன் கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தானலிங்கம், வருவாய் துறை வாட்டாட்சியர் ஜெகதீசன், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விளைநிலத்திற்குள் மின்கோபுரம் அமைக்கக்கூடாது, இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மின் திட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல கேரள மாநிலத்தை போல் நிலத்திற்குள் கேபிள்கள் பதித்து இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதுகுறித்த பேச்சுவார்த்தை அரசுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் சர்வாதிகாரமாக அதிகாரிகள் எங்கள் நிலத்திற்குள் இறங்கி அளவீடு செய்வதை எதிர்க்கிறோம் என்றனர். மேலும், பேச்சுவார்த்தை முடியும் வரை அதிகாரிகள் நிலத்திற்குள் இறங்க மாட்டார்கள் என்
கிற உத்தரவாதத்தை அளித்தால் இப்போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ஆனால், பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள்கண்துடைப்பிற்காக பேச்சுவார்த்தையில் பங்கேற்றது சிறிது நேரத்தில் அம்பலமானது. உங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என தெரிவித்துவெளியே வந்த அதிகாரிகள் அப்படியே வாகனத்தை திருப்பிகொண்டு சென்று விட்டனர். இதனால் இப்பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் விவாசயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், மின்சார துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டுமெனவும், அப்பேச்சுவார்த்தை முடியும் வரை எவ்வித பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. விவசாயிகள், விளைநிலங்களில் மின் கோபுரங்களை அமைக்க ஒருபோதும் விடமாட்டோம். மூன்றுநாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று வருகிறோம். என்ன கோரிக்கைக்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்று கூடவா பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த அதிகாரிகளுக்கு தெரியாது.

பெயரளவுக்கு நாங்கள் வந்தோம் என்று கணக்கு காட்டுவதற்காக இந்த நாடகத்தை அதிகாரிகள் நடத்தியுள்ளனர் என விவசாயிகள் குற்றம்சாட்டினர். முன்னதாக, வெள்ளியன்று நடைபெற்ற போராட்டத்தை வாழ்த்திமார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மதிமுக நடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எல்.கணேசமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் வி.எம்.சி.மனோகரன், கொமதேக பெரியசாமி மற்றும்பல்லடம் சத்தியமூர்த்தி, உடுமலைகனகராஜ்ஆகியோர் உரையாற்றினர்.அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகதொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரபடுத்த முடிவு செய்தனர்.

சாத்தியமில்லை மாவட்ட ஆட்சியர் பிடிவாதம்

இதனிடையே கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன் பங்கேற்று பேசுகையில், விவசாய நிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிப்பிற்குள்ளாகும். மேலும், லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வெட்டப்படும் அபாயம் உள்ளது. ஆகவே இத்திட்டத்தை கேபிள்கள் மூலம் நிலத்தடியில் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கைவைத்தார்.

மேலும் இது தொடர்பாக செஞ்சேரிமலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடந்த மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருவதை குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியர், உயர் அழுத்த மின்சார திட்டத்தை நிலத்திற்குள் கொண்டு செல்வதற்கு சாத்தியமில்லை. இதனால் பல கோடி ரூபாய் செலவாகும். இதுகுறித்து மின்சார துறை அமைச்சரிடமும் பேசிவிட்டேன் அவர்களும் இதுசாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார். ஆகவே நிலத்தின் வழியாகத்தான் கொண்டு செல்ல முடியும் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் பதிலில் அதிருப்தியடைந்த தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர்கள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.