ஈரோடு : விவசாய விளைநிலங்களில் விவசாயிகளின் அனுமதியின்றி காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அத்துமீறி உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா, கொடுமுடி தாலுகா 24 வேளாம்பாளையம், கொங்குடையம் கிராமங்களில், மொடக்குறிச்சி கிராமம் கரியாகவுண்டவலசு ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க வருவாய்த்துறையினர், காவல்துறையினரின் பாதுகாப்போடு நிலம் அளவீடு செய்யும் பணியை ஞாயிறன்று மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் பவர் க்ரிட் நிறுவனம் உயர் மின் அழுத்த மின் பாதை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நியூ புகளூர் முதல் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை 800 கிலோவாட் மின்சாரத்தை கொண்டுசெல்ல திட்டமிட்டு உள்ளனர்.

அதற்காக உயர் மின் கோபுரம் அமைப்பது தொடர்பாக முதல் கட்ட ஆய்வு பணி நில அளவை எடுக்கும் பணியில் ஈரோடு மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கோபி காவல்துறை துணை கண்காணிப்பாளர், பெருந்துறை காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஈரோடு நகர துணை கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான காவலர்களை வைத்து முன் அறிவிப்பு எதுவும் இன்றி அத்துமீறி நுழைந்து மிரட்டி, பணியை தொடங்க முற்பட்டனர். இதனையடுத்து, விவசாயிகள் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது, நில மதிப்பீடு குறைகிறது, எங்கள் விளை நிலங்களில் நாங்கள் விவசாயம் செய்ய முடியவில்லை என்று தடுத்து கதறி அழுதனர். வருவாய்த்துறையினரின் அராஜக நடவடிக்கையை கண்டித்து கேள்வி எழுப்பிய விவசாய சங்க நிர்வாகிகளான பெருமாள், முனுசாமி, கவின் குமார், கொங்கு பூபதி, ராசு, பழனிசாமி, பார்த்திபன், கிருஷ்ணகுமார், அருள், பொன்னுசாமி, உட்பட நிர்வாகிகளும் பெண்கள் என்று பாராமல் பெண் விவசாயிகளையும், ஆண்களையும் பலவந்தமாக காவல்துறையினர் கைது செய்து அரச்சலூர் அருகில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதுகுறித்து விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், மத்திய பாஜக அரசு திருப்பூர் மாவட்டம் புகளூர் முதல் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை செல்லும் 800 கேவி உயர்மின்கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈரோடு மாவட்டத்தில் விவசாயநிலத்தில் உயர் மின்கோபுரம் அமைக்கும் முயற்சியில் மொடக்குறிச்சி வட்டம் 60 வேலம்பாளையம், எழுமாத்தூர் ஊராட்சியில் நில அளவீடு செய்ய அரசு அதிகாரிகள், வருவாய் துறையினர் காவல்துறையினருடன் வந்து அத்துமீறி நுழைந்து விவசாய நிலத்தை அளக்க முயற்சித்தனர். இதையடுத்து, விவசாயிகள், நில அளவீடு செய்ய மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காட்டுமாறு கேட்க, தகுந்த ஆதாரம் ஏதும் இல்லாததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் விவசாயிகளையும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் விஜயராகவன், தங்கவேல் மற்றும் ஆதரவாளர்களையும் வலுக்கட்டாயமாக கைது செய்துவிட்டு நில அளவீடு செய்தனர்.

இதேபோல், கனபதிபாளையம் ஊராட்சி சின்னம்மாபுரத்தில் சிவக்குமார் தலைமையிலும், கொடுமுடிவட்டம் கொங்குடையாம்பாளையம் ஊராட்சியில் உள்ள எடக்காட்டுவலசில் 5 பெண்கள் உட்பட 26 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க கூடாது என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இதுகுறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு வருகிறது.இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படாத நிலையில் வருவாய்த்துறையினர் காவல்துறையினரின் உதவியோடு அத்துமீறி நிலத்தை அளவீடு செய்ததும், இதுகுறித்து கேள்வி எழுப்பிய விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகளை கைது செய்த செயல் சர்வாதிகாரமானதாகும். எனவே, தமிழக அரசு உடனடியாக அத்துமீறலில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.