விழுப்புரம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா மற்றும் வளர்ச்சி நிதி அளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில், “காலங்காலமாக ஆண்ட முதலாளி வர்க்கத்திற்கு எதிராக லெனின் தலைமையில் தொழிலாளர்கள் சோவியத் ரஷ்யாவில் 1917-ல் புரட்சி நடந்தது முதலாளித்துவ ஆட்சி ஒழிக்கப்பட்டது. இது உலகின் முதல் வரலாற்று புரட்சி. இதுமாதிரி இதுவரை உலக வரலாற்றில் நடக்கவில்லை. உலக சமூக வரலாற்றில் முதல் முறையாக தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிந்த புரட்சி சோவியத் புரட்சி” என்றார். லெனின் தலைமையில் தொழிலாளர்கள் புரட்சி வெற்றி பெற்று உலக அளவில் நம்பிக்கை ஏற்படுத்தியதோடு, உலக நாடுகளில் பலவற்றில் சோசலிச புரட்சிக்கு இது உத்வேகமாக இருந்தது. உலகத்தை ஆளத் துடித்த பாசிச சக்திகளான ஹிட்லர், முசோலினிகள் விரட்டி அடிக்கப்பட்டு பாசிச சர்வாதிகாரம் ஒழிந்தன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் நேரு இந்திய வளர்ச் சிக்கு அமெரிக்கா போன்ற நாடுகளிடம் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த உதவி எதிர்பார்த்தார். ஆனால் யாரும் உதவிக் கரம் நீட்டவில்லை. சோவியத் ரஷ்யா உதவியது. இரும்பு தொழிற் சாலையும், மின்சார வசதிகளும் கிடைத்தன. உலகில் பல நாடுகளின் சுய சார்பு வளர்ச்சிக்கு ரஷ்யா உதவியது. பகுத்தறிவு பிரச்சாரம் செய்து வந்த பெரியார் ரஷ்யாவுக்கு சென்று அங்கு கல்வி மருத்துவம், வீடுகள் இலவசம் என்பதை பார்த்து பாராட்டினார். நாடு திரும்பிய பிறகு சமதர்ம கொள்கைக்காக போராடினார். தற்போது உலக அளவில் ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கல், தனியார் மயம்,தாராள மயம் கொக்கரித்து வருகின்றன. போராடி பெற்ற இலவசக் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் ஆட்சி முறை மத வெறி ஆட்சி முறையாக மாறி வருகிறது. அரசியல் சட்டங்களை மாற்ற முயற்சிக்கிறது ஆர்எஸ்எஸ் அமைப்பு. நாட்டில் பொருளாதாரம் பாஜகவின் ஆட்சியில் முட்டு சந்தில் போய் முட்டிக் கொண்டு நிற்கிறது என்றும் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

இந்த கூட்டத்தில் தீக்கதிர் சந்தா நிதியாக ரூ.93 ஆயிரமும், கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.27 ஆயிரமும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கினர். தனது 25வது திருமண நாளையொட்டி சிஐடியு பொருளாளர் அம்பிகாபதி தீக்கதிர் வளர்ச்சிநிதியாக ரூ.25 ஆயிரம் வழங்கினார். மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: