புதுக்கோட்டை:
தமிழக மின்வாரிய ஊழியர்கள் போதிய பாதுகாப்புக் கருவிகள் இல்லாததால் எந்த நேரத்தில் தங்களது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற அச்சத்துடனே பணியாற்ற வேண்டிய அவலம் தொடர்கிறது.

கஜா புயல் தாக்கி 17 நாட்களைக் கடந்த பின்னும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமப்புறப் பகுதிகளுக்கு இன்னமும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால், குடிநீர் கூட கிடைக்காமல் கிராம மக்கள் தொடர்ந்து அல்லாடி வருகின்றனர். இதனால், மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு ஆங்காங்கே மின்சாரம், குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டங்களை தினந்தோறும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு தலைக்கவசம் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படாததால் எந்த நேரத்திலும் தங்களின் உயிருக்கு ஆபத்து வரலாம் என்ற அச்சத்துடனேயே பணியாற்றிட வேண்டிய அவலம் உள்ளது. போதிய பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் பணியாற்றியதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமைச்சர் மழுப்பல்
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் திங்கள் கிழமையன்று நிவாரணப் பணிகளை பார்வையிட வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மின்சார சீரமைப்புப் பணிகளுக்காக கேரள அரசு தனது ஊழியர்களை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்களுக்குத் தேவையான அத்தனை பாதுகாப்பு உபகரணங்களுடன் கேரள அரசு அனுப்பி வைத்துள்ளது. இதனால், அவர்கள் தைரியத்துடன் மின் இணைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தமிழக வீரர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பணியாற்ற வேண்டியுள்ளதே என்ற கேள்விக்கு அண்டை மாநில ஊழியர்களும் இணைந்து பணியாற்றுவதால்தான் மின் இணைப்புப் பணிகள் துரிதமாக நடக்கிறது.

தமிழக வீரர்களும் பாதுகாப்பாகத்தான் பணியாற்றுகின்றனர். சில இடங்களில் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளது உண்மைதான். சரி செய்யப்படும் என மழுப்பலாகப் பதிலளித்தார்.
மேலும், புயல் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் தொற்று நோய் பாதிப்பு இல்லாத அளவில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு குளோரின் பவுடர்கள் தூவப்பட்டுள்ளது. மருத்துவக்குழுக்களும் முகாம்களை நடத்தி வருகின்றனர். மின்சாரம் வழங்கும் பணிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: