சீர்காழி : கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2011–ம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்கான புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட நாளிலிருந்து இக்கட்டிடம் பூட்டியே கிடக்கிறது.
ஆச்சாள்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடத்திற்கு பக்கத்திலேயே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 250 மாணவர்களுக்கு மேல் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவர்களுக்கு தாராளமான வகுப்பறை கட்டிடம் இல்லாமல் இருந்தும் எதிரே வீணே பூட்டிக் கிடக்கும் பள்ளிக் கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளி மாணவர்கள் மிகவும் பழமையான சுகாதாரமற்ற சிறிய கழிவறை கட்டிடத்தை மட்டுமே சிரமத்திற்கு இடையே பயன்படுத்தி வருகின்றனர். கழிவறை கட்டிடமும் யாருக்கும் பயனின்றி உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் பள்ளி கட்டிடத்தை திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி 2011 ஆம் ஆண்டு முதல் பூட்டியே கிடக்கும் பள்ளி கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: