கஜா புயல் தாக்குதலின் கோரத்தால் ஏற்பட்ட கடுமையான அழிவுகளிலிருந்து சற்றே சதவீதம் குறைந்திருந்தாலும் கையறு நிலையில் உள்ளனர் திருவாரூர் ஒன்றியப் பகுதியில் வாழும் மக்கள். கடந்த 29 ஆம் தேதி கனமழைக்கி டையே என்ன நிலவரம் என்று ஆய்வு செய்ய சிபிஎம் திருவாரூர் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.மாதவன் ஆகியோ ருடன் தீக்கதிர் சார்பில் மக்களை சந்தி த்தோம். இரவில் இருந்தே டெல்டா மாவட்டங்களில் கனமழை இடைவிடாது பெய்துகொண்டே இருந்தது. புயல் தாக்குதலின் போது மழை அதிக அளவில் இல்லாததால் சம்பா பயிர்களுக்கு பாதிப்பு இல்லை என்று விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சற்று நிம்மதியுடன் இருந்துள்ளனர். ஆனால் அதையும் அதற்கு பிந்தைய தொடர் கனமழை கெடுத்து விட்டது என்ன செய்ய போகிறோம்; அறுவடைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ‘தொண்டை க்கதிர்’ சம்பா பயிர்கள் அழுகி நாசமாகி போய்விடுமே என்று சென்ற இடமெல்லாம் விவசாயிகளின் கவலை எதிரொலித்தது.

வேப்பத்தாங்குடி வேதனை
மனச்சுமையுடன் கூடூர் ஊராட்சியைச் சேர்ந்த வேப்பத்தாங்குடி என்ற கிராமத்திற்கு சென்றோம். அவ்வூர் மக்களின் வேதனை மிகுந்த கவலை அளிப்பதாக இருந்தது. கஜா புயல் நவ.15 நள்ளிரவு வேளையில் கரை கடக்கத் தொடங்கியபோது, இந்த கிராம மக்கள் எவரும் தூங்கவில்லை. அவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூக விவசாய கூலித் தொழிலாளர்கள்; அவர்கள் வசிக்கும் வீடுகளின் இன்றைய நிலைமோசம். எவ்வளவு உயிர்கள் அழிந்து விடுமோ என்று அச்சப்படும் அளவிற்கு காலனிவீடுகள், தொகுப்பு வீடுகள், காலனி ஓட்டு வீடுகள் என அனைத்தும் சீர்குலைந்த நிலையில் அபாயகரமாக இருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு கட்டமாக தமிழக அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் தான் தற்போது மனிதர்கள் வசிக்கவும் ஏன் கால்நடைகளை கூட கட்டிவைக்கவும் தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை.

தவழ்ந்து தவழ்ந்து வந்தோம்…
புயல் வீசியபோது எங்கள் வீடு (சிறு குடிசை தான்) மரம் மற்றும் மின்கம்பங்கள் காற்றின் வேகத்தால் வீட்டின்மீது விழ உயிரை கையில் பிடித்துக்கொண்டு மண்டியிட்டும், தவழ்ந்தும் வீட்டில் இருந்து குனிந்த நிலையில் வெளியே வந்தோம் அன்று நாங்கள் உயிர் தப்பியது அதிசயம்தான். எங்கும் இருட்டாக இருந்ததால் எதுவும் தெரியவில்லை. பொழுவிடிந்ததும் தான் விபரீதம் என்ன என்று தெரிந்தது என்று கூறினார் வசந்தா என்ற பெண்மணி. விமலா என்பவரின் வீடு முற்றிலும் தரைமட்டமாகி இருந்தது. அருகில் இருந்த காலனி வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர் இவரது குடும்பத்தினர். அந்த மேலத்தெரு, கீழத்தெரு என அனைத்து மக்கள் முகத்திலும் சோகம். வாழ்க்கையை பற்றிய கவலை அந்த ஊர் முழுவதும் படர்ந்திருந்தது.

கூத்தங்குடி – அன்னுகுடி
கூத்தங்குடி, அன்னுகுடியிலும் அதே நிலைதான். மின்சாரம் இல்லை. குடிநீர் தட்டுப்பாடு. சுகாதாரப் பணிகள் நடைபெறவில்லை. சிபிஎம் கிளை செயலாளர் ஆர்.நாகராஜன் கூறியபோது, எங்கள் முயற்சியில் சுமார் 6 ஆயிரம் ரூபாயை இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் வீடு வீடாக வசூலித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மின் ஊழியர்கள் உதவியுடன் ஒரு சில மின் கம்பங்களை சீர் செய்துள்ளோம். இப்பகுதியில் உட்கிராமங்களிலும் மின்சார வசதி இல்லை. மின்சாரம் கிடைத்தால் தான் மற்ற எல்லாப் பணிகளும் நடக்க, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப முடியும் என்றார்.

விவசாயி மரணம் – இழப்பீடு
அன்னுகுடியைச் சேர்ந்த விவசாயி பூர்ணசந்திரன் (56), புயல் தாக்கிய சூழலில் கனமழை பெய்தபோது பண்ணை வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். வயலுக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள் பதற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இரண்டு நாட்கள் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். கனமழை காரணமாக வாய்க்காலில் நிரம்பி வழிந்தோடிய தண்ணீருக்குள்ளே துணி ஒன்று லேசாக தெரிந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அந்த இடத்தில் மக்கள் கூடி சோதனைசெய்த போது, விவசாயி பூர்ணசந்திரனின் உயிரற்ற உடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முறைப்படி உடற்கூராய்வு செய்து பிறகு இறுதி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். மறைந்த விவசாயின் மனைவி இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவருக்கு கூலிவேலை செய்யும் இரண்டு மகன்கள் உள்ளனர். அசாதாரண சூழ்நிலையில் மரணம் அடைந்த அவரது குடும்பத்திற்கு உதவிடும் பொருட்டு முதலமைச்சர் பொது நிவாரண நிதிமூலம் நிதி உதவி செய்யவேண்டும் என இவ்வூர் மக்கள் தமிழக முதல்வரை கேட்டுகொண்டனர்.

கெடுபிடி தான் மிஞ்சியது
28 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் திருத்துறைப்பூண்டியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு திருவாரூருக்கு வருகை தந்தார். இந்த சாலையில் உள்ள கூத்தங்குடி மற்றும் அன்னுகுடி ஊர் மக்கள் மறைந்த விவசாயி பூர்ணசந்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊர் பகுதியின் சாலையோரத்தில் பேனர் ஒன்றை வைத்திருந்தனர். இதனை உடனடியாக அகற்றவேண்டும் என்று காவல் துறையினர் கெடுபிடி செய்துள்ளனர். முதலமைச்சர் வருவதற்கும் இந்த பேனருக்கும் என்ன சம்பந்தம் என்று அவர்களுடன் ஊர் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். காவல் துறையினர் மீண்டும், மீண்டும் கெடுபிடி செய்ய அதனை ஏற்க மறுத்து சிபிஎம் தலைவர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மறைந்த விவசாயிக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன் பேனரையும் அகற்றவில்லை.

ஆளுங்கட்சியினரின் உற்சாகம்…
கஜா புயல் தாக்கிய நாளிலிருந்து இன்றுவரை ஆளும்கட்சி பிரமுகர்களின் அத்து மீறல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உயர்தர தங்கும் விடுதிகள் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான திட்ட இல்லம், ஆய்வு மாளிகை, விருந்தினர் மாளிகை போன்றவற்றில் எவ்வித சிரமமும் இல்லாமல் அமைச்சர்களோடு தங்கிக்கொண்டு அவர்கள் இட்ட பணிகளை தலைமேல் தாங்கி செய்து வருகின்றனர். நிவாரண முகாம்கள் இவர்களது கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. புயலால் பாதிக்கப்பட்டு வேதனையில் செத்துமடிந்து கொண்டிருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவரும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு ‘உற்சாக வரவேற்பு’ அளிக்கிறார்கள். இதனால் வழக்கம் போல் மக்களுக்கு போக்குவரத்து நெருக்கடியால் சிரமங்கள் ஏற்பட்டது. மழையில் நனைந்து கொண்டே சாலையில் காத்து நின்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இதனால் எரிச்சலடைந்தனர். கஜா புயலை பயன்படுத்தி உண்மையான அதிமுக தாங்கள் தான் என காட்டிகொள்வதற்காக அரசு இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் மக்களோ வாழ்க்கை இழந்து துடிக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்க உருப்படியான பணிகளை அரசு செய்ய வேண்டும்.

பல பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் உதவுகிறார்கள். முகாம்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை மட்டும் பெற்றுக்கொண்டு மற்ற அனைத்து செலவுகளையும் தங்களது சொந்த பொறுப்பில் செய்து சமைத்து ஒரு வேளை உண்கிறார்கள். வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு மத்திய, மாநில அரசுகள் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு அமைதி காத்து வருகிறார்கள். மக்களின் இந்த ஒத்துழைப்பை அரசு புரிந்துகொண்டு விளம்பர அரசியல் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, விவசாயிகளைப் பாதுகாக்க, அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார் சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன்.

Leave a Reply

You must be logged in to post a comment.