பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் கிராமத்தில் இருபிரிவினரிடையே தொடர்ந்து வரும் மதக்கலவரத்திற்கு தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் சார்பில் சமூக நல்லிணக்கம் ஏற்படுத்த வலியுறுத்தி மக்கள் நலப் போராட்டக்குழு சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தர்ணா நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை தலைமை வகித்தார். சிபிஐ வீ.ஞானசேகரன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அபுபக்கர் சித்திக், விசிக வீரசெங்கோலன், பகுஜன் சமாஜ் கட்சி ப.காமராசு, அம்பேத்கர் பேரவை இரா.ஸ்டாலின், மதிமுக துரைராஜ், தமுமுக குதரத்துல்லா, திராவிடர் கழகம் அக்ரிஆறுமுகம், துரை.தாமோதிரன், கட்டுமானத் தொழிலாளர் ஈஸ்வரன், நாம் தமிழர் கட்சி ப.அருள், தலித் கிறிஸ்தவ விடுதலை சந்தானதுரை, தமிழர் கூட்டமைப்பு அசன்முகமது, சிபிம் எஸ்.அகஸ்டின், எ.கலையரசி, பி.ரமேஷ், எம்.கருணாநிதி, பி.கிருஷ்ணசாமி, தமுஎகச ப.செல்வகுமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநிலச் செயலாளர் முகைதீன்அப்துல்காதர் சிறப்புரை ஆற்றினார்.

வி.களத்தூரில் இருசமுதாய மக்களி டையே 1951-ஆம் ஆண்டிலிருந்து மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது. இதனை பயன்படுத்தி மக்கள் ஒற்றுமையை தொடர்ந்து இந்துத்துவா சக்திகள் சீர்குலைத்து வருகின்றன. இது சம்பந்தமாக 2013 ஆண்டு அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு இருதரப்பு மக்களிடையே நேரில் பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனை செய்து எடுத்த முடிவை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் எதிர்தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை.  இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இரண்டு முறை தீர்ப்பு வழங்கப்பட்டும் ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வி.களத்தூர் கிராமத்தில் கடந்த 3 மாதமாக இந்து முஸ்லீம் மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவா சக்திகள் முயற்சித்து வருகின்றன.

மேலும் சில மாதங்களுக்கு முன் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டு மாவட்ட காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறது. இது குறித்து ஊர்மக்கள் மற்றும் மக்கள் நலப் போராட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடமும் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பொய் வழக்கு பதிவு செய்யப்பட்ட வர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். நீண்ட கால இப்பிரச்சனைக்கு தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் சார்பில் இருதரப்பினரையும் அழைத்து பேசி சமூக நல்லிணக்கம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்ணாவில் வலியுறுத்தப்பட்டது. சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.