சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை திறம்பட செய்த பெண் விவசாயிக்கு, மத்திய அரசின் மகிளா கிஷான் விருது வழங்கப் பட உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையைச் சேர்ந்தவர் அழகு. கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு மானிய விலையில் ஆயில் இன்ஜின் வாங்குவதற்காக, 6 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூரில் வேளாண்மைத்துறை அதிகாரிகளைத் தன் கணவருடன் சேர்ந்து சந்தித்தார். அதுதான் அழகுக்கு விவசாயத்தில் புதிய பாதையைத் திறந்து விட்டது. அழகுக்கு விவசாயத்தின் மீதிருந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்ட வேளாண்துறை அதிகாரிகள், தர்ப்பூசணி பயிரிடுவதற்கு ஆலோசனை வழங்கினர். அதுவரை தர்ப்பூசணியைப் பயிரிடாததால் தங்கள் நிலத்தில் விளையுமா என்ற தயக்கம் இருந்தாலும் துணிந்து முடிவெடுத்தார் அழகு. அதில் நல்ல வருமானம் பார்த்த அழகு, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி, ஆடு, மாடு வளர்ப்பு குறித்துப் பயிற்சி எடுத்துக்கொண்டார். பசுஞ்சாணம், கோழி எரு ஆகியவற்றை பயன்படுத்தி, சிறு அளவில் தொடங்கிய விவசாயத்தை, 10 ஏக்கர் பரப்புக்கு விரிவுபடுத்தினார்.

குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தினர் சோதனைக்காகப் பல பயிர் ரகங்களை அழகுக்குக் கொடுத்துப் பயிரிடப் பரிந்துரைத்தனர். அவர்களின் வழிகாட்டுதலில் பாலூர் 1 ரக சிறுகீரை, கோ 5 வெங்காயம், சம்பங்கி போன்றவற்றைப் பயிரிட்டார். அதில் நல்ல மகசூலும் லாபமும் கிடைக்க, தினசரி வீட்டுச் செலவுக்காக விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பிலும் இறங்கினார் அழகு.
முதலில் கறவை மாடுகள் வாங்கி, பால் கறந்து தனியார் மூலம் ஆவினுக்கு அனுப்பிவைத்தார். அதன் பிறகு பசுக்கள் வளர்க்கும் 60க்கும் மேற்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து, புதிதாக ஒரு கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்திய அழகு, காலையிலும் மாலையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட லிட்டர் பாலை ஆவினுக்கு அனுப்பிவருகிறார். இவற்றுடன் தன் தேடலை நிறுத்திவிடாத அழகு, நாட்டுக்கோழிப் பண்ணையும் வைத்துள்ளார்.

கடக்நாத் எனும் கருங்கோழிகளை வளர்த்து கிலோ 450 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அவர், முட்டையை 10 ரூபாய்க்கு விற்கிறார். வயலுக்குத் தேவையான இயற்கை உரத்தை மாட்டுச்சாணம் மூலம் தானே தயாரித்துக் கொள்கிறார். மூலிகைப் பூச்சிவிரட்டியையும் இடுபொருட்களையும் தயாரித்துக்கொள்வதால் உரச்செலவு இல்லை. மேலும், தற்போது ஆவின் பாலகம் நடத்தி வரும் அழகு, அதன் மூலமும் கணிசமான வருமானம் ஈட்டுகிறார். அவரது அந்த அயராத உழைப்புக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்த அடையாளம்தான் மகிளா கிஷான் விருது. மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் இந்த விருதை வரும் 5ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ள விழாவில் பெண் விவசாயி அழகு பெற்றுக்கொள்ள உள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.