தஞ்சாவூர் : பூதலூர் அருகே செங்கிப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்ட அறிவிப்பு காரணமாக சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் செங்கிப்பட்டியில், திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில்(சர்வீஸ் ரோடு) செங்கிப்பட்டி பேருந்து நிறுத்தங்களில் விபத்தை ஏற்படுத்தும் சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவ.25 அன்று பூதலூர் தெற்கு ஒன்றியச்செயலாளர் சி.பாஸ்கர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நவ 30 ஆம் தேதிக்குள் சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர்.

ஆனாலும் வெள்ளிக்கிழமை வரை சாலை சீரமைக்கப்படவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சோலை.ரமேஷ், தமிழரசன், விஜயகுமார் மற்றும் பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்துவதற்கு திரண்டனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க உறுதியளித்தனர். உடனடியாக அதிகாரிகள் சாலையில் முதற்கட்டமாக ஜல்லிக்கற்களை கொட்டி சீரமைத்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.