தஞ்சாவூர் : இளைஞர் கொலை வழக்கில் 5 பேருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அன்று ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. தஞ்சாவூர் கரந்தை செல்லியம்ம ன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மலையரசன்(26). இவர் கடந்த 2014 டிச.25ம் தேதி கரந்தையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிந்து தஞ்சாவூர் அருகேயுள்ள சக்கரசாமந்தத்தைச் சேர்ந்த எஸ்.வெற்றி(30), சி.செல்வகுமார் (41), கல்யாணபுரத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் (28), ஆர்.ராஜ்குமார் (31), கரந்தையைச் சேர்ந்த ஏ.வெங்கடேஷ் (30) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், பள்ளியக்ரஹாரத்தில் உள்ள மீன் குளத்தைக் குத்தகை எடுப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் மலையரசன் கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக தஞ்சாவூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற த்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞர் ஆர்.சதீஷ்குமார் வாதிட்டார். இந்த வழக்கை நீதிபதி கே.பூர்ணஜெய ஆனந்த் விசாரித்து வெற்றி, கார்த்திக், ராஜ்குமார், செல்வகுமார், வெங்கடேஷ் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் முதலாவது எதிரியாகச் சேர்க்கப்பட்டிருந்த சக்கரசாமந்தம் வடகால் கிராமத்தைச் சேர்ந்த சி.சதீஷ்குமார்(27) பழி வாங்கும் நோக்கில் 2015 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: