சீர்காழி : நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே ரயில் பாலத்தையொட்டி மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் என தினந்தோறும் வாகனங்கள் மூலம் எடுத்து வந்து குவியலாக கொட்டப்படுகின்றன. ஆற்றின் கரையையொட்டி கொட்டப்படும் குப்பைகள் மற்றும் இறந்த விலங்கினங்களால் தினந்தோறும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஆற்று நீர் மாசுபடுவதுடன் நோய் ஏற்படுவதற்கு காரணமான கிருமிகளும் தண்ணீரில் பரவுகின்றன. கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி அமைந்துள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாடுகள் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பருகி வருகின்றன. மாசுபட்ட தண்ணீரை குடிப்பதால் கால்நடைகள் அடிக்கடி நோயினால் பாதிக்கப்படுகின்றன. கால்நடைகள் இறக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் தூய்மை திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து பயன்படுத்துவதற்கும் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கும் தனித்தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் பணியில் ஈடுபட்டும், கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராம குப்பைகளும், கழிவுகளும் தினந்தோறும் கொட்டப்படுகின்றன. இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே உடனடியாக கரையோர கிராம மக்கள் மற்றும் கால்நடைகளின் நலன் கருதி குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.