பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ.13ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி; இந்தியா திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து என்று அவரது வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டும் அவர் பதிலளிக்கவில்லை. இந்தநிலையில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா திரும்பினால் தாம் கும்பல் கொலை செய்யப்படலாம் என்று அஞ்சுவதாகவும், தன்னுடைய வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட குடும்பத்தினர் கூட தம்மை கொலை செய்யலாம் என்றும் நீரவ் மோடி நீட்டி முழக்கியுள்ளார். வழக்கம் போல விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு கம்பி நீட்டிய விஜய் மல்லையாவுக்கு இதேபோன்று நோட்டீஸ் அனுப்பியபோது தாம் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் தம்மை கைது செய்ய இங்கிலாந்து அரசின் அனுமதி பெறவேண்டுமென்றும் வாதிட்டார். அவரை ஒருவேளை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தால் அவருக்கு சிறையில் என்னென்ன வசதி செய்துதரப்படும் என்று லண்டன் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அவருக்கு சிறையில் பல்வேறு வசதிகள் செய்து தர தயாராக இருக்கிறோம் என்று விளக்கம் அளித்தனர் அதிகாரிகள்.

அந்த நாட்டு நீதிமன்றம் நம்பாமல் மல்லையாவுக்கு வழங்கப்படவுள்ள சிறப்பு வசதியை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டது. விசாரணை அதிகாரிகளும் கழிவறை உட்பட படம் எடுத்து அனுப்பினர். கடன் வாங்கிவிட்டு தப்பியோடிய யாரையும் மோடி அரசாங்கம் பிடித்து விசாரிக்கவில்லை. மாறாக அவர்கள்தான் மோடி அரசாங்கத்தை பல்வேறு வகைகளில் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். 2017 -18 ஆம் ஆண்டில், அதிகளவு நன்கொடை பெற்ற கட்சி பாஜகதான். ஆயிரம் கோடிக்கு மேலாக அந்தக் கட்சி நன்கொடை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. இதையும் வெளிநாட்டுக்கு தப்பியோடும் தொழிலதிபர்கள் பட்டிய லையும் இணைத்து குழப்பிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அப்படி சேர்த்துப் பார்த்தால் நீங்கள் தேச விரோதியாகி விடுவீர்கள்.

மறுபுறத்தில் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும்என்று வலியுறுத்தி 207க்கு மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த உழவர்கள் தலை
நகர் தில்லியில் பேரணி சென்றுள்ளனர். அவர்களது பிரதானமான கோரிக்கை கடன் தள்ளுபடி. ஆனால் விவசாயிகள் பிரச்சனைக்கு கடன் தள்ளுபடி தீர்வாகாது என்று நிதி ஆயோக் கருத்து தெரிவித்துள்ளது. கடன் தள்ளுபடி செய்தால் நிலவுரிமையாளர்கள்தான் பலன் பெறுவார்கள்; குத்தகைதாரர்களுக்கு எதுவும் கிடைக்காது என நிதி ஆயோக் கூறுகிறது. குத்தகைதாரர்களுக்கு பலன் கிடைப்பதை யாரும் தடுக்கவில்லை. மோடி அரசைப் பொறுத்தவரை கடன் நிவாரணம் என்பது இரண்டு வகைப்படும். கார்ப்பரேட் முதலாளிகள் வெளிநாட்டுக்கு தப்பி விட வேண்டும். இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்பதுதான் அது.

Leave A Reply

%d bloggers like this: