திண்டுக்கல் : ஜெயலலிதா எடப்பாடி அரசின் செயல்பாட்டை பார்த்து தற்கொலை செய்திருப்பார் என்று திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கிண்டலாக பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையின் செயல்பாடுகளை விமர்சித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சனியன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

வருகிற டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஒரு வேளை ஜெயலலிதா உயிருடன் இருந்து இப்போதிருக்கிற எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையிலான இந்த ஆட்சியை பார்த்திருந்தால் மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டிருப்பார். நாம் கட்டிக்காத்து வளர்த்த ஆட்சியா இப்படி நடைபெறுகிறது என்று மனம் நொந்து போயிருப்பார். தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தை இந்த நாடு மட்டுமல்ல உலகமே பாராட்டுகிறது. குழந்தைகளுக்கு தினம் ஒரு உணவாக வெரைட்டி சாதம் வழங்க ஜெயலலிதா ஏற்பாடு செய்தார். அத்தகைய திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும் முட்டையிலும். அரிசியிலும் கிட்டத்தட்ட ரூ.2400 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு ஊழல் ஊதாரித்தனத்தில் திளைத்துள்ள ஆட்சியாக அதிமுக ஆட்சி நிலவுகிறது. இந்த ஆட்சியின் கடைசி நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. 4 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக புறப்பட்டால் கூட ஆட்சி மாற்றம் வந்துவிடும் நிலை உள்ளது.

கேரளத்திடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கஜா புயல் பாதிப்பால் தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு கோடி தென்னை மரங்கள் அழிந்துள்ளன. இந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு டெல்டா மாவட்ட மக்களுக்கு 3 மாதங்கள் வரை பிடிக்கும். சோழ நாடு சோறுடைத்து என்பார்கள். அப்படி உலகத்துக்கே சோறு போட்ட தஞ்சை தரணியில் வாழும் மக்கள் இன்றைக்கு சோற்றுக்காக கையேந்துகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி ஒரு அரை நாள் ஒதுக்கி டெல்டா மாவட்டத்திற்கு வர வேண்டாமா? தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டாமா? மக்கள் செத்து சுண்ணாம்பாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் அய்யப்பன் கோவிலில் போலீஸ் காரர்களோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொன் ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு ஒரே ஒரு மத்திய அமைச்சராவார். அவர் இந்த மாநில மக்கள் புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது இந்த மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்டுப்பெற்று தர வேண்டாமா? கேரள மாநிலத்தில் ஒக்கி புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால் அந்த அரசு ஒக்கிப் புயலை விட வேகமாக சுழன்று பணியாற்றி நிவாரணம் வழங்கியது. அது போல இந்த அரசு செயல்பட்டிருக்க வேண்டாமா? 2015ம் ஆண்டு முதல் தமிழகம் தொடர்ந்து மழை வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்டு வருகிறது. கஜா புயலைக் காரணம் காட்டி தேர்தலை வஜா செய்வதற்கு எடப்பாடி மோடியை சந்தித்தாரே ஒழிய மக்களுக்கு தேவையான நிதியை பெற செல்லவில்லை என்று கருதுகிறேன்.

சோகத்திலும் அமைச்சர்கள் நகைச்சுவை
புயல் வெள்ளத்தின் போது கூட தமிழக அமைச்சர்கள் சிரிக்க வைக்க ஜோக்கடித்துக்கொண்டிருக்கிறார்கள். திண்டுக்கல் சீனிவாசன் விமானத்தில் இருந்து மின்கம்பங்களை நட வேண்டும் என்கிறார். அப்படி எல்லாம் செய்ய முடியாது என்று உடன் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சொல்கிறார். இல்ல புதுசா கண்டு பிடிக்கனும் என்கிறார் சீனிவாசன். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரும் விமானத்தில்; சென்று புயல் சேதத்தை பார்வையிடுகிறார்கள். மக்களை நேரடியாக சென்று சந்திக்க மறுக்கிறார்கள். கேரளத்தில் ஒக்கி புயல் தாக்கிய போது 3 நாட்களும் முதல்வர் பினராய் விஜயன் பாதிக்கப்பட்ட மக்களோடு தங்கியிருந்து அங்கிருந்து அரசாங்கத்தை நடத்துகிறார். இது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசுக்கும், அதிமுக அரசுக்கும் உள்ள வேறுபாடு.

பாலபாரதி சிலை கடத்தினாரா?,
இந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேலை நான் கேட்டுக்கொள்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாக வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு மூத்த அதிகாரிகளிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள். இல்லை எங்களிடம் தான் கட்சியை பற்றி பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தால் நாங்கள் கற்றுத்தர தயாராக உள்ளோம். இந்த தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினரான இருந்தவர் கே.பாலபாரதி. அவர் சீனாவுக்கு சுற்றுலா செல்ல தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது வழக்கு இருக்கிறது என்று பாஸ்போர்ட் அனுமதி மறுத்தீர்கள். பிறகு நீதிமன்றம் சென்று அனுமதி பெற வேண்டியிருந்தது. நான் என்ன கேட்கிறேன் என்றால் பாலபாரதி மீது என்ன வழக்கு கஞ்சா கடத்திய வழக்கா, கள்ளநோட்டு அடித்த வழக்கா? சிலை திருட்டு வழக்கா? என்ன கிரிமினல் வழக்கு இருந்தது. கிரிமினல் வழக்கில் உள்ளவர்கள் கூட சுற்றுலாவிற்கு சென்று வர அனுமதிக்கிறீர்கள். மக்கள் கோரிக்கைகளுக்காக போராடுகிற அரசியல் தலைவர்கள் மீது போடப்படுகிற வழக்கையும் கிரிமினல் வழக்கையும் இணைத்து பார்க்கிற உங்கள் கண்ணோட்டமே சிறுபிள்ளைத்தனமாக இல்லையா?

நள்ளிரவில் கைது
பழனியில் மாற்றுத்திறனாளி சங்கத்தின் தலைவர் பகத்சிங் மீது வழக்கு பதிந்து இரவோடு இரவாக வீட்டில் போய் கைது செய்கிறீர்கள். அவர் மீது என்ன குற்றச்சாட்டு. தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார் என்று கூறுகிறீர்கள். இனிமேல் அனைத்து பிரச்சனையையும் நாங்கள் உங்களிடம் மனுவாக கொடுத்துவிடுகிறோம். நீங்களே தீர்த்து வைத்தால் நாங்கள் எதுக்கு போராட போகிறோம். போராட அனுமதி கொடுத்தால் அதற்கு இடம் ஒதுக்கி போக்குவரத்தை சரி செய்து தர வேண்டும் என்பது தான் உங்கள் வேலை. போராட்டம் நடத்தக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு அதிகாரங்கள் இல்லை. போராடும் உரிமையை இந்த நாட்டின் அரசியல் சட்டம் வழங்கியிருக்கிறது.

காவல்துறை மீது வழக்கு போடுவோம்
பழனியில் முதலாளிகளுக்கு ஆதரவாக விவசாயிகள் மீது வழக்கு போடப்படுகிறது. ஜாமீனில் வந்தவர்கள் மீது மீண்டும் வழக்கு போடப்படுகிறது. இது ஜனநாயகத்தின் ஆட்சியர் என்ன? தலைக்கனம் மற்றும் ஆணவத்தோடு நீங்கள் செயல்படக்கூடாது. மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து வழக்கு போட்டால் அதே நீதிமன்றத்தில் நாங்கள் உங்கள் மீது வழக்கு போடுவோம். எங்களுக்கும் சட்டம் தெரியும். பாதிக்கப்பட்ட மனிதன் அரசுக்கு எதிராக வழக்கு போட அரசியல் சாசனம் உரிமை வழங்கி இருக்கிறது. நீங்கள் என்ன வழக்கு போட்டாலும் இங்கு தான் இருப்பார்கள். ஆனால் நீங்கள் வேறு ஊருக்கு மாற்றலாகிவிடுவீர்கள். தொடர்ந்து வழக்கை சந்திக்க வேண்டிவரும். எங்கள் கட்சியின் உள்ள கடைசி தொண்டன் கூட போராளி தான்.

ஜனநாயகத்தின் காவலன் சிபிஎம்
தூத்துக்குடியில் 14 பேர்களை காவல்துறை சுட்டுக்கொன்றது போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக முதல்வர் பழனிச்சாமி சொன்னார். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒரு கார் கண்ணாடி கூட உடைபடவில்லை. தொலைக்காட்சி பெட்டிகள் உடைபடவில்லை. இந்த காட்டுமிராண்டித்தனமான மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் பதிய வேண்டும் என்று கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்சுணன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தின் கதவுகளை தட்டினோம். சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ வழக்கு பதிய முன்வரவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். இப்போது சிபிஐ துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமானவர்கள், காவல்துறையினர் மீது வழக்கு பதிந்துள்ளது. அந்த போராட்டத்தில் இறந்து போனவர்கள் எங்கள் சொந்தங்கள். ஆனாலும் இந்த தேசத்தின் ஜனநாயகத்தின் காவலன் என்ற முறையில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நாங்கள் தூத்துக்குடி சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத்தராமல் விடமாட்டோம். சிதம்பரம் காவல்நிலையத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பத்மினிக்கு நீதி பெற்று தந்தது. வாச்சாத்தியில் மலை வாழ் மக்களை பாலியல் பலாத்காரத்திற்குள்ளான வனத்துறை மற்றும் காவலர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்தது என்று பல சம்பவங்களை நினைவுபடுத்த முடியும். எனவே திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராகிய சக்திவேல் எடப்பாடி பழனிச்சாமி மெச்சுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு மோதுவதாக இருந்தால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

இந்த பொதுக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் கருப்புசாமி, நகரச் செயலாளர்; ஆசாத், ஒன்றியச் செயலாளர் அஜாய் கோஷ் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.முத்துச்சாமி. கே.ஆர்.கணேசன், ராஜமாணிக்கம். அருள்செல்வன், கமலக்கண்ணன், ராhணி, வசந்தாமணி,குணசேகரன். பிரபாகரன். பங்கேற்று பேசினர்.

(நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.