தஞ்சாவூர் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புதன்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடா மீனவக் கிராமத்தில் மக்களுக்கான மருத்துவர் அரங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்க தாம்பரம் கிளை சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டார். பின்னர் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பை, மதுக்கூர் ஒன்றியம் அத்திவெட்டி ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புகளை பார்வையிட்டு, விவசாயிகள், தொழிலாளர்களிடம் கஜா புயல்பாதிப்பு குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது: கஜா புயல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பிரதானமாகவும், வேறு சில மாவட்டங்களில் பகுதியாகவும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

புயலினால் சேதம் ஏற்படுவது என்பதுதவிர்க்க முடியாதது என்றாலும் கூட அதன்பிறகு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஆனால் தற்போது அரசின் சார்பில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. 13 தினங்களை கடந்த நிலையிலும் இதுவரை மின்னிணைப்பு பெரும்பாலான இடங்க
ளுக்கு கொடுக்கப்படவில்லை. முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. எனவே மக்கள் நிவாரண முகாம்களை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். தற்போது கஜா புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். எனவே கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு கான்கிரீட் வீடுகள்கட்டித்தர வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக நெல் சாகுபடி சரிவராமல் போகவே விவசாயிகள் தென்னை சாகுபடியை, நோக்கி செல்லத் தொடங்கி விட்டனர். பெரும்பாலான இடங்களில் தென்னை பயிர் செய்ய ஆரம்பித்துள்ளனர். தற்போது கஜா புயல் காரணமாக தென்னை முற்றிலுமாக அழிந்துவிட்டது.

தென்னை மரத்திற்கு என 1,100 ரூபாய் நிவாரணம் என்பது விவசாயிகளுக்கு போதாது. எனவே கூடுதலான நிவாரணம் வழங்க வேண்டும். சாய்ந்து கிடக்கும் தென்னையை அப்புறப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் காரணமாக விவசாயிகள் மட்டுமின்றி தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னை விவசாயிகளுக்கு 5 வருட காலத்திற்கு வட்டியில்லா கடனை அரசு வழங்கவேண்டும். கூட்டுறவு வங்கிகள், வேளாண் கூட்டுறவு வங்கிகள், வர்த்தக வங்கிகளில் நகை அடகு கடன் விவசாய கடன் பெற்றவர்களின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். மைக்ரோபைனான்ஸ் நிறுவன கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். கஜா புயல் காரணமாக மாணவர்களின் பாடப்புத்தகங்கள் மழையில் நனைந்து வீணாகி விட்டன. எனவே புதிய பாட புத்தகங்களை வழங்க வேண்டும்.  மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமான படகுகளை இழந்துள்ளனர். எனவே அரசு புதிதாக படகுகளை வாங்கித்தரவேண்டும். அமைச்சர்கள், அதிகாரிகள், மத்திய குழுவினர் நிவாரணப் பணிகளை பார்வையிட வந்து சென்றாலும் அது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் கிராமநிர்வாக அலுவலர் மூலம் வீடு வீடாகச் சென்றுகணக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த கணக்கெடுப்பும் எதையும் விட்டுவிடாமல் முழுமையாக இருக்க வேண்டும். மாநில அரசு மாஸ்டர் பிளான் திட்டமிட வேண்டும். அவை மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாக அமைய வேண்டும் மாநில அரசு கோரும் நிதியைமத்திய அரசு மறுக்காமல் கொடுக்க வேண்டும்.  மக்களுக்கு அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் மாநில அரசு செய்து தர வேண்டும். பிரதமர் மோடி மத மோதலை உருவாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறார். ஆனால் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கஜா புயல் பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளார். மத்திய அரசு, பாஜகஅரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். அவர்களுக்கு மக்கள் நலன் குறித்துஅக்கறை இல்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சி.பழனிவேலு, ஆர்.மனோகரன், சின்னை.பாண்டியன், எஸ்.தமிழ்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, ஆர்.காசிநாதன், பட்டுக்கோட்டை நகரச்செயலாளர் எஸ்.கந்தசாமி, டாக்டர் சி.வி.பத்மானந்தன், மெரினா ஆறுமுகம், ஏ.கோவிந்தசாமி மற்றும் பலர் உடனிருந்தனர். தொடர்ந்து ஆம்பலாபட்டு, கரம்பயம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.