விருதுநகர் : தமிழக அரசு, கூட்டுறவு சங்கங்களில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களை பாதுகாப்போம் அமைப்பின் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். விருதுநகரில் என்.வி. நினைவரங்கில் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் மற்றும் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி, செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:- தமிழக அரசு கூட்டுறவு சங்கத் தேர்தல் தமிழகத்தில் நடத்தப் பட்டது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. தமிழகத்தில் 2 கோடியே 4 லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர். இதில் பலர் இறந்து விட்டனர். எனவே, புதிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் புகைப் படம் அவசியம் இருத்தல் வேண்டும். இதனால், முறைகேட்டை தேர்தலில் தடுக்கலாம். ஜனநாயகப் பூர்வமாக, சுதந்திரமாக கூட்டுறவு சங்கங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், பல ஊர்களில் ஆளும் கட்சியினரின் கைப்பாவையாக கூட்டுறவு சங்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் வேலையை ஆளும் கட்சியினர் செய்து வருகின்றனர். குறிப்பாக தரமற்ற பொருட் களை மொத்தமாக வாங்கி அதை விற்கும் வேலையை சங்கத்தின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் துணையுடன் செய்து வருகின்றனர். 450 சங்கத்தில் தேர்தல் முறையாக நடைபெறவில்லையென வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதியதாக வந்துள்ள இயக்குநர்கள் பலருக்கு கூட்டுறவு சங்கத்தின் விதிமுறைகள் பற்றியே தெரியாத நிலை உள்ளது. எனவே, கூட்டுறவுத் துறை, அவர்களுக்கு பயிற்சி தர ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

பெரும்பாலான கூட்டுறவு சங்கத்தில் கூட்டம் நடைபெறாமலேயே இயக்குநர்களிடம் தீர்மான நோட்டில் கையெழுத்து வாங்கும் நிலை உள்ளது. பல இடங்களில் கையெழுத்துகளை பெற்ற பின்பு, விரும்பிய தீர்மானங்களை எழுதிக் கொள்கின்றனர். தற்போது கூட்டுறவு சங்கங்களில் தவறு நடைபெற்றால் அதற்கு முழுப்பொறுப்பும் தலைவர்தான் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் நகைகளை மீட்க முடியவில்லை. தற்போது வரை கடனை வட்டியுடன் செலுத்தினால் மட்டுமே நகையை தர முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். போலியாக நகைகளை வைத்து மோசடி, வீட்டுவசதி சங்கத்தில் தங்களது பத்திரத்தை திருப்ப முடியாமல் பலர் உள்ளனர். இலவச வேஷ்டி, சேலை வாங்குவதிலும் மோசடி. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளுக்கான துணிகள் ஆந்திர மாநிலத்தில் வாங்கப் படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் அதற்கு துணை போவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக் கையை எடுக்க வேண்டும். அமைச்சர்களை வைத்து வெறும் கூட்டுறவு வார விழாக்களை நடத்தினால் போதாது. ஒவ்வொரு இயக்குநர் மற்றும் தலைவர்களுக்கு கூட்டுறவுத்துறை உரிய பயிற்சியை வழங்க வேண்டும். முறைப்படி, ஜனநாயகமாக, சுதந்திரமாக செயல்படும் அமைப்பாக கூட்டுறவு சங்கங்களை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூணன், கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) மாவட்டத் தலைவர் எம்.அசோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: