நாகர்கோவில்:
நாம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகுதான் நமது உரிமைகளை பெற்றுள்ளோம். நம்மை பழைய கால அடிமைத்தனத்துக்கு கொண்டு செல்ல முயற்சித்தால் அது முடியாது என்று சொல்லும் உரிமை நமக்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சம்பத் கூறினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குமரி மாவட்ட18 வது மாநாட்டு பொதுக்கூட்டம் ஞாயிறன்று மாலை சுவாமியார்மடத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் (கேரளம்) ஏ.சம்பத் பேசியதாவது:

நாட்டை இருட்டில் கொண்டு செல்ல சிலர் முயற்சித்து வருகின்றனர். ஒன்றே ஜாதி, ஒன்றே மதம், ஒன்றே நீதி, ஒன்றே குலம், ஒன்றே அரசு என்று சொன்ன அய்யா வைகுண்டரின் சுவாமித்தோப்பு அய்யாபதிக்கு சென்று விட்டுதான் இங்கு வருகிறேன். கண்டால் போதாது, கேட்டால் போதாது, தொட்டால் போதாது, நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என அய்யா வைகுண்டர் கூறினார். நால்வர்ண முறையையும், இந்தி மொழியையும் திணிக்கவும், திராவிடத்திற்கு எதிராக ஆரிய ஆதிக்கத்தை திணிக்கவும் நடந்த முயற்சியை எதிர்த்து போராடி தடுத்து நிறுத்திய பெரியாரின் மண் தமிழ்நாடு. இங்கு நமது முன்னோர்கள் மார்பை மறைக்கவும், முட்டுக்கு கீழ் உடை உடுத்தவும் ஒரு காலத்தில் உரிமை இல்லை.

அய்யா வைகுண்டர், உடலை மறைக்கவும், மார்பை மறைக்கவும் உள்ள உரிமை தெய்வம் கொடுத்த உரிமை என கூறினார். பெண்கள் மார்பை மறைத்து உடை உடுத்திய போது அந்த பெண்களை ஆதிக்க சாதியினர் சாலையில் போட்டு அடித்தார்கள். அய்யா வைகுண்ட சுவாமியை பிடித்து சிறையில் அடைத்தார்கள். அந்த காலத்தில் 3 சாணார் கலகங்கள் நடந்தன. அக்காலத்தில் பரமசிவன், விஷ்ணு, பிரம்மன், சரஸ்வதி, லட்சுமி, கணபதி போன்ற தெய்வங்களை சாதாரண ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழிபட உரிமையில்லாத காலத்தில் ஸ்ரீநாராயணகுரு சிவனை பிரதிஷ்டை செய்து இது நம்முடைய சிவன் என்றார். அங்கு எப்போதும் எந்த மதத்தினரும், எந்த இனத்தினரும், எந்த சாதியினரும் வந்து வணங்கலாம் என்றார்.

சகோதரன் அய்யப்பன்
இன்று எங்கு சென்றாலும் யாரும் யாரிடமும் நீ எந்த சாதி என கேட்பதில்லை. நாம் அவர்களிடமும் அவ்வாறு கேட்பதில்லை. ஆனால் அன்று நிலைமை அப்படியில்லை. அன்று வெளுத்த மனிதர்கள் கறுப்பு மனிதர்களுடன் உணவு உண்பதில்லை. சாதி பிரித்து உணவு கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அய்யப்பன் சமபந்தி போஜனம் நடத்தினார். அப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் அய்யப்பனின் காலில் விழுந்து தம்புரானே என அழைத்தபோது அவர் அவர்களின் தோளில் கை போட்டு, நான் தம்புரான் அல்ல. சகோதரன் அய்யப்பன் என கூறினார். அவர் சாலையில் சென்றபோது பிராமணர்கள், பறையன் அய்யப்பன் என கேலி செய்தனர். அவர் நாராயணகுருவிடம் சென்ற அழுதபோது, நீ செய்ததுதான் சரி. இதுதான் இந்த சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் என கூறினார்.

நாம் வரலாற்றின் நெறிகேடுகளை நீக்கி, அர்த்தமற்ற பழைய சம்பிரதாயங்களை ஒழித்துத்தான் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி, தீமையிலிருந்து நன்மைக்கு நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.

சிதைக்குள் தள்ளிய சதி
நம்பூதிரிகள் 12 வயதுக்கு கீழே உள்ள பெண்களை திருமணம் செய்து வந்ததற்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. பெண்ணுக்கு ஆட்சியில் உரிமையில்லை. சொத்தில் உரிமையில்லை. அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. விதவை மறுமணத்திற்கு உரிமையில்லை. விதவை மறுமணம் நடைபெற்ற போது, அந்த இளைஞர்களை கொடூரமாக பரிகசித்தார்கள். இன்று எந்த பெண்ணும் தனது கணவன் இறந்தால், எத்தனை துக்கம் இருந்தாலும் உடன்கட்டை ஏறுவதில்லை. பழைய காலம் எப்படி இருந்தது? ஒரு பெண் விதவையானால் அந்த பெண் தானாகவே சிதையில் விழுந்து சாகவில்லையென்றால் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து சிதையில் தள்ளினார்கள்.

ராஜஸ்தானில் 1999 ஆம் ஆண்டு ஒரு பெண்ணின் கணவர் இறந்ததால், சிதையில் குதித்து சாக சொல்லியும் கேட்காததால், அந்த பெண்ணை தூக்கி சிதையில் தள்ளி கொன்றனர். இந்த நாட்டில் நமக்கு கிடைத்த உரிமைகள் போராடித்தான் கிடைத்துள்ளது. தானாக கிடைத்ததில்லை. வைக்கம் கோவில் வீதியில் தாழ்த்தப்பட்டவர் நடக்க பெரியார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையையும், அங்குள்ள மியூசியத்தையும் சங்பரிவாரத்தினர் வந்து பார்த்து விட்டு சொல்லுங்கள். நீங்கள் எப்படி நீங்களானீர்கள் என ஆர்எஸ்எஸ்காரர்கள் உணர வேண்டும்.. குருவாயூர் கோவிலில் தாழ்த்தப்பட்டவர் பிரவேசிக்க உரிமை கேட்டு தோழர்.ஏ.கே.கோபாலன் தலைமையில் பெரும் போராட்டம் நடைபெற்றது.

மனித மாமிசம் கேட்டது போல
கேரளத்தில் பெருவெள்ளம் வந்து கடும்பாதிப்பு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க முதற்கட்டமாக 4000 கோடி ரூபாய் கேரள அரசு மத்திய அரசிடம் கேட்டது. ஆனால் கேரளத்தை புனர்நிர்மாணம் செய்ய 30 ஆயிரம் கோடி ரூபாயாவது வேண்டும். ஆனால் மத்திய அரசு கொடுக்க வில்லை. ஆனால் வளைகுடா நாடுகளில் உள்ள கேரள மக்களும், சவுதி அரேபியாவும் 700 கோடி ரூபாய் வழங்க முன்வந்த போது மத்திய அரசு அதை தடுத்தது. ஷைலாக் என்ற கொடூரன் மனித மாமிசம் கேட்டது போல வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்கு அரிசி, மண்ணெண்ணெய் அளித்ததற்குகூட மத்திய அரசு பணம் கேட்டது. ஆனால் ஒரு சிறுமி தான் சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை நிவாரண நிதியாக வழங்கினாள். பிற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் குமரி மாவட்டத்தில் இருந்தும் சாதி மதம் பாராமல் நிவாரண உதவிகளை வழங்கினார்கள். ஆனால் சங்பரிவாரத்தினர் நிவாரணம் கொடுக்கக்கூடாது என சமூக வலைதளங்களில் விஷமத்தை பரப்பினர். போராடி வந்தவர்கள் நாங்கள், போராடி முன்னேறுவோம்.

சபரிமலைக்கு முன்பு ஆண்களும் பெண்களும் என அனைவரும் சென்று கொண்டிருந்தார்கள். பந்தளம் மகாராஜாவின் குடும்பத்தினரின் பெண்கள் உட்பட சென்று குழந்தைக்கு சோறூட்டும் சடங்கு நடத்தியுள்ளனர். இதை யாரும் மறுக்கமுடியாது. அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்த சில பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிட்ட போது அதை முதன்முதலில் வரவேற்றவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தீர்ப்பை வரவேற்றார். ஆர்எஸ்எஸ்ஸின் பத்திரிகைகள் ஆர்கனைசர், கேசரி, ஜன்மபூமியில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என தலையங்கம் எழுதியது. ஆனால் தீர்ப்பு வந்த 4 தினங்களுக்கு பிறகு தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னித்தலா தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என போராட்டம் நடத்துகிறார்.

ஆபாசப்பேச்சும் நாமகோஷமா?
சபரிமலையில் தீவிரவாத ஊடுருவல் உள்ளது என மத்திய அரசு தகவல் கொடுத்துள்ளது. அங்கு ஏதாவது விபரீதம் நடந்தால், நீங்கள் ஏன் காவல்துறை பாதுகாப்பை அதிகரிக்கவில்லை. ராணுவத்தை பயன்படுத்தவில்லை. வாகனங்களை பரிசோதிக்கவில்லை என கேட்பார்கள். கேரளத்தில் சபரிமலையில் கலவரம் செய்தவர்களை கைது செய்தபோது அதில் கிரிமினல் வழக்குகள், பலவேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தோழர் பினராயி விஜயனை ஆபாசமாக பேசினால் அது நாமகோஷ யாத்திரை ஆகுமா? ஒரு அப்பாவிக்கும் பிரச்சனை உண்டாக வில்லை. பக்தர் என்ற பெயரில் கலவரம் நடத்த வந்தவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். நாம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகுதான் நமது உரிமைகளை பெற்றுள்ளோம். நம்மை பழைய கால அடிமைத்தனத்துக்கு கொண்டு செல்ல முயற்சித்தால் முடியாது என சொல்லும் கடமை நமக்கு உண்டு என அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.