விருதுநகர் : தமிழகத்தில் ஆளுங்கட்சிக்காரர்கள், அதிகாரிகள் சம்பாதிப்ப தற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்திட முயற்சிக்கும் நிலையை உருவாக்கி வருகின்றனர். இதற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தென்மண்டல பயிற்சி முகாம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள சமூக – பொருளாதார மாற்றங்களால் கிராமப்புற மக்கள் அன்றாடம் பிழைப்பை நடத்துவதற்கு மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இயந்திர பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் அற்பசொற்பமாக கிடைக்கும் விவசாய வேலைகளும் ஆண்டுதோறும் குறைந்து கொண்டே போகிறது. மாற்று வேலைத் திட்டமான 100 நாள் வேலைத்திட்டத்தையும் ஆட்சியாளர்கள் முழுமையாக அமல்படுத்தவில்லை. இதர வேலைகள் மூலமாக வாழ்க் கையை ஓட்டிக் கொண்டிருக்கும் மக்கள் குழந்தைகளின் கல்வி, நோய் உள்ளிட்ட காரணங்களால் நுண்நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அல்லல்படும் துயரம் தொடருகிறது.

சில மாதங்களுக்கு முன்பாக கந்து வட்டிக்கு கடன் வாங்கி கட்ட முடியாமல் திணறிய தூத்துக்குடி இசக்கிமுத்து குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலக வாசலிலேயே தீயிக்கு இரையாக்கிக் கொண்டதைக் கண்டு நாடே பதறியது, நம் ஆட்சியாளர்களைத் தவிர. இதற்கு பிறகும் கூட விழிக்காத அரசு, இதை தடுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. தற்கொலைகளும் ஆங்காங்கே நடந்தேறி வருகிறது. வறட்சி, புயலால் சிக்கியுள்ள பகுதிகளில் கூட நுண்நிதி நிறுவனங்கள் கடனை வசூலிக்க மனிதநேயமற்ற, ஈவு இரக்கமற்ற வகையிலும் முயற்சிக்கிறது. ஆகவே, நுண்நிதி நிறுவனங்களை தடை செய்வதுடன், அரசுடைமை வங்கிகளில் கிராமப்புற மக்களுக்கு சிறு- குறு கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை விதொச தென்மண்டல பயிற்சி முகாம் வலியுறுத்தியுள்ளது.

 தமிழக அரசுக்கு கண்டனம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசும், மாநில அரசும் சீர்குலைக்கும் வகையில் பல உத்தரவுகளைப் போட்டு சட்ட விதிகளை மீறிய நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் வேலை அமலாக்கம் குறைந்து விவசாயத் தொழிலாளர்களுக்கு 30, 40 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பாக பொருட்கள் செலவினத்தை 40 சதவீதத்திலிருந்து 93 சதவீதம் வரை உயர்த்தி, தொழிலாளர்களுக்கு கூலியாக கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாயை ஒப்பந்தக்காரர்களுக்கும் எந்திரங்களைப் பயன்படுத்தியும் ஆங்காங்கே வேலை செய்து வருகின்றனர். இது தற்போது மேலும் அதிகமாகி, பண்ணைக்குட்டை உள்ளிட்ட வேலைகளைத் தீர்மானித்து அதைச் செய்திடும் வகையில் தொழிலாளர்களின் வேலை அட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டு வருகைப் பதிவு செய்துவிட்டு, ஒப்பந்தக்காரர்கள் மூலமாக – எந்திரங்களைப் பயன்படுத்தி செய்திட முயற்சித்து வருகின்றனர். இது அரசு உதவியுடன் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இயற்கை இடர்பாடுகளான வறட்சி, புயல் உள்ளிட்ட இருமுனைத் தாக்குதலால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள இச்சூழலில், வேலையின்றி வாடும் கிராமப்புற மக்களுக்கு கூடுதல் வேலை நாட்களை வழங்கிட வேண்டிய அரசு, அதற்குப் பதில் திட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்ற முயற்சிப்பது கண்டனத்திற்குரியதாகும். ஆகவே, தமிழக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் சட்டவிதிகளை முழுமையாக செயல்படுத்திடும் வகையில் இதுபோன்ற முறைகேடுகளை களைந்திட வேண்டும். பயனாளிகளுக்கு முழுமையாக வேலையும், சட்டக் கூலி ரூ.224ஐயும் வழங்கிட வேண்டுமென தமிழக அரசை வி.தொ.ச. தென்மண்டல பயிற்சி முகாம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.