புதுதில்லியில் நடந்த உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் வீராங்கனை மேரி கோம் உலக சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக வென்றுள்ளார்.

35 வயதாகும் மேரி கோம், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவராவார். ஏழைக் குடும்பத்தில், மூன்று குழந்தைகளில் முதல் குழந்தையாகப் பிறந்த மேரி கோமின் துவக்க வாழ்க்கை ஏற்ற இறக்கத்துடன்தான் இருந்தது. விளையாட்டில் ஆர்வத்துடன் இருந்த அவர், பங்கேற்காத விளையாட்டுகளே இல்லை. பள்ளியில் வாய்ப்பு கிடைக்கும் அனைத்து விளையாட்டுகளிலும் களமிறங்கினார். 1998 ஆம் ஆண்டில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த ஆசியக் குத்துச்சண்டைப் போட்டியில், மணிப்பூரைச் சேர்ந்த டிங்கோ சிங் தங்கம் வென்று திரும்பியது மேரி கோமின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதிலிருந்து அவரது கவனம் குத்துச்சண்டையின் பக்கம் முழுமையாகத் திரும்பியது.

பென்சில்வேனியாவில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலகக் குத்துச் சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் தற்போது வரையில் சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவில் 32 பதக்கங்களை வென்றுள்ளார். இந்தச் சாதனைகளை கவுரவிக்கும் விதமாக, மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தற்போது ஆறாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். இது உலக சாதனையாகும். இதற்கு முன்பாக கேத்தி டெய்லர் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. திருமணம், குடும்ப வாழ்க்கை எல்லாம் பெண்களின் இலக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்ற கருத்தை மேரி கோம் தகர்த்திருக்கிறார். கருங் ஓங்கோலர் கோம் என்ற கால்பந்து வீரரைத் திருமணம் செய்த மேரி கோமுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கர்ப்ப காலம், பிரசவம் மற்றும் குழந்தைகளின் துவக்க காலம் என்று சிறிது இடைவெளி ஏற்பட்டாலும் மீண்டும் எந்தவிதத் தடை களையும் பொருட்படுத்தாமல் பயிற்சியைத் துவங்கி விடுவார். குத்துச்சண்டையை இவர் தேர்வு செய்தபோது அது வருமானம் ஈட்டும் விளையாட்டாக இருக்கவில்லை. தனது ஆர்வம், முயற்சி, நம்பிக்கை போன்றவற்றையே மூலதனமாகக் கொண்டு முன்னேறினார். தற்போது இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலகக் குத்துச்சண்டை வரலாற்றிலேயே எந்தப் பெண்ணும் சாதிக்காத தை சாதித்துக் காட்டியுள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக இருக்கும் அவர் விலங்குகள் நல ஆர்வலராகவும் உள்ளார்.

இதோடு அவர் நிற்கப் போவதில்லை. ஒலிம்பிக் தங்கத்தில் தனது கண்களைப் பதித்துள்ளார். தனது 48 கிலோ எடைப்பிரிவு ஒலிம்பிக்கில் இல்லையென்றாலும் 2020 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் 51 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கவிருக்கிறார். ‘‘அற்புத மேரி’’ என்ற அடைமொழி பெயரை உண்மையென மீண்டும் நிரூபிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.