கடலூர்,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை குடிசைகள் இல்லாத மாவட்டமாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.

நெய்வேலியில் ஞாயிறன்று (நவ.25)செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:தமிழகத்தில் கஜா புயலால் எட்டு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி சார்பிலும் நேரடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த பாதிப்பை ஈடு செய்வதற்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும். நிர்வாகம் நிவாரணப் பணிகளை சொற்பமாகவே செய்கிறது, போதுமானதாக இல்லை. கணக்கெடுக்கும் பணி முழுமை அடையாமலேயே அரைகுறையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பல கிராமங்களுக்கு இன்னும் செல்லவே முடியவில்லை. எப்படி இவர்கள் கணக்கெடுத்தார்கள். பிரதமரை சந்தித்தது நிவாரணம் கோருவதற்கு மட்டுமா என்ற சந்தேகம் எழுகிறது. கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுக்கிறதா என்பது ஒருபுறம் இருக்க மறுபுறம் இன்று வரை எந்த நிதியையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து புயல் வெள்ளம் போன்றவைகளால் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் குடிசைகள் அதிகமாக உள்ளன. இவர்கள் கோயில்,மடங்களுக்கு சொந்தமான இடங்களில்குடியிருப்பதால் பட்டா இல்லாமல் அரசு அறிவிக்கின்ற பல்வேறு வீடுகட்ட திட்டங்களை இவர்கள் பயன்படுத்த முடியாமல் போகின்றது. எனவே இந்த டெல்டா மாவட்டங்களை குடிசைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற அரசு தனி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதிய சட்டத் திருத்தங்கள் செய்து அனைவருக்கும் பட்டா வழங்கி கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். கடந்த காலங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை அப்போதிருந்த முத லமைச்சர் ஜெயலலிதா சிறப்புத் திட்டம் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. என்எல்சி போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சில கிராமங்களை தத்தெடுத்து அனை வருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க முன்வரவேண்டும். சத்துணவு வழங்கும் திட்டத்தில் பொருட்கள் சப்ளை செய்த வகையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது கையூட்டாக மட்டும் ரூ.2400 கோடி கொடுக்கப்பட்டதாக ஆதாரத்துடன் செய்தி கிடைத்துள்ளது. இது வன்மை யான கண்டனத்துக்குரியது. பச்சிளம் குழந்தைக்கு உணவு பால் கொடுப்பதில் மனிதாபிமானம் இல்லாமல் கொள்ளையடித்துள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

என்எல்சி நிர்வாகம் ஆண்டுதோறும் லாபத்தை ஈட்டி வருகிறது. ஆனால் தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இன்று 9 ஆயிரம் அளவில் உள்ளது. என்எல்சி நிறுவனம் வருவதற்கு காரணமாக இருந்த நிலம் கொடுத்தவர்களுக்கு 1992 வரை இவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்பட்டது. பின்னர் காண்ட்ராக்ட் வேலை மட்டுமே வழங்கி வந்தனர். தற்போது அந்த வேலையையும் அவுட்சோர்சிங் என்ற பெயரில் வெளிமாநில தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் நிலை உள்ளது. கடலூர் மாவட்ட இளைஞர் களுக்கும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் என்எல்சி நிறுவனத்துக்கு எந்த லாபமும் இல்லை. வெளிமாநில கம்பெனிகள் தான் லாபம் பெறுகின்றன. எனவேஅவுட்சோர்சிங் முறையை ஒழித்துவிட்டு கடலூர் மாவட்ட இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்புவது, அப்ரண்டீஸ் பணி முடித்தவர்களுக்கு நிரந்தர வேலை, ஒப்பந்த தொழி லாளர்களை நிரந்தரப்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இல்லை என்றால் கடலூர் மாவட்ட இளைஞர்கள் வேலையற்றவர்களாக மாறும் சூழல் ஏற்படும். கடலூர் மாவட்டத்தில் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.340 கோடி அளவிற்கு பாக்கி தரவேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்தப்படி இந்த தொகையை பெற்றுத்தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். பேட்டியின் போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு, நகர செயலாளர் ஆர்.பாலமுருகன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.மீனாட்சிநாதன், ஜி.குப்புசாமி, பொருளாளர் னிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.