கன்னியாகுமரி : மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. கல்வி மீதான மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் குறிப்பிட்டார். அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பாகிய ஐபக்டோவின் 31-ஆவது கல்வி மாநாடு கன்னியாகுமரியில் வெள்ளியன்று (நவ.23)தொடங்கியது. தமிழகத்தின் கல்லூரி ஆசிரியர் சங்கங்களான மூட்டா, அரசுகல்லூரி ஆசிரியர் கழகம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியவை இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கன்னியாகுமரி சிஎஸ்ஐ அரங்கில் அனைவருக்குமான அறிவியல் பூர்வ சமத்துவக்கல்வி என்ற பொருளில் இம் மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் துவக்கவிழாவிற்கு ஐபக்டோ தலைவர் கேசவ் பட்டாச்சாரியா தலைமை தாங்கினார். மூட்டா பொதுச்செயலாளர் சுப்பாராஜூ வரவேற்றார். திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன் மாநாட்டு மலரை வெளியிட்டார். தில்லி பல்கலைக்கழக ஆசிரியர் மன்றத்தலைவர் ராஜிவ் ரே முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் சிறப்புரையாற் றினார். அப்போது அவர் கூறியதாவது: பல ஆண்டுகளாக ஆசிரியர்களோடும் ஆசிரியர் சங்கங்களோடும் இணைந்து பணியாற்றி வருகிறேன். கல்வித்துறையில் நிகழ்ந்து வரும் பல மாற்றங்கள் கவலை அளிக்கின்றன. தொழிலாளர் நலச்சட்டங்கள் நிர்வாகங்களுக்கு சாதகமாக மாற்றப்படுகின்றன.இந்தியாவில் 41 சதவீதம் தொழிலாளர் மிகக்குறைந்த ஊதியம் பெறுகின்றனர். சுயநிதி பிரிவு ஆசிரியர்களும் இதில் அடங்குவர். கல்வி அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வி வணிகமயமாக்கலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.கல்வி மீதான மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தத்துவரீதியாக கல்வியை களங்கப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இப்பிரச்சனைகள் குறித்து இம்மாநாடு தீவிரமாக விவாதிக்க வேண்டும் என அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

பிற்பகல் அமர்வில் ஐபக்டோ பொதுச் செயலாளர் அருண்குமார் அறிக்கை சமர்ப்பித்தார். பல்கலைக்கழக ஆசிரியர் மன்ற தலைவர் காந்திராஜ், மூட்டா பொதுச் செயலாளர் நாகராஜன், ஐபக்டோ முன்னாள் தலைவர் ஜேம்ஸ் வில்லியம், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலு, பேராசிரியர் சுதான்சு பூஷன், அரசுக்கல்லூரி ஆசிரியர் மன்ற செயலாளர் தாமோதரன், பொருளாளர் கோபால கிருஷ்ணன், ஜெஎன்யு பேராசிரியர் சுராஜித் மஜூம்தார், பேராசிரியர்கள் அனில் சடகோபால், மொகாந்தி, ஜெயகாந்தி, ஹர்கோபால், சுவாமிநாதன், ஐபக்டோ துணைத்தலைவர் ரவி ஆகியோர் பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை இம்மாநாடு நிறைவடைகிறது. இம்மாநாட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டு விவாதத்திலும் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.